Breaking News

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி

நூருல் ஹுதா உமர்  

பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சாய்ந்தமருது மக்களுக்கு  அதை தருவதாகவும் இதைதருவதாகவும் கூறி  ஏமாற்றினர். தேர்தல் காலத்தில் அந்த பிரதேசத்திற்கு சென்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலின் பின்னர் அந்த மக்களுக்கு நகரசபை தருவதாக கூறினார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அங்கு வருகைதந்திருந்த போது அந்த மக்கள் தமது நகரசபையை கோரினர். அடுத்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நான்கு சபைகளாக இருக்கும் என கூறினார். முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவும் தேர்தலுக்கு பின்னர் தருவதாக வாக்குறுதியளித்தார் என தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.


இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,


சாய்ந்தமருதுக்கு தனி நகரசபையை ஸ்தாபிக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன் போது அரசியல் ஆதாயம் தேடும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டனர். சாய்ந்தமருதில் திருமணம் செய்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ஒருவரும் இவ்விடயத்தில் முனைப்பு காட்டினார். சாய்ந்தமருது நகரசபையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியானதாக மாற்றுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். 


முஸ்லிங்கள் வரலாறு நெடுகிலும் அரசர்களுக்கும், அரசாங்கங்களுக்கும் ஆதரவானவர்களாகவே இருந்துள்ளனர். இதுவே வரலாறு. "சாய்ந்தமருது" நீண்ட கால அரசியல் வரலாறு கொண்ட ஊர் மட்டுமல்ல , பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதை ஏப்ரல் குண்டு வெடிப்புக்கு பிந்திய நாட்களில் நிரூபித்தவர்கள். அரசியலுக்காக அவர்களின் வரலாறு தெரியாதவர்கள் காட்டிக்கொடுக்க முற்பட்டனர் என்றார்.




No comments

note