காலிமுகத்திடலிலிருந்து அலரி மாளிகை வரை : ஹக்கீமின் இராஜதந்திரம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.
இன்றைய அரசியலில் பேசுபொருளாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயம் அமைந்திருந்ததைப் பார்க்கலாம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசு முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்விஜயம் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் கொரோனா பாதிப்பால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸா கட்டாயத் தகனஞ்செய்யப்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை எதிர்த்து முஸ்லிம் சமூகம் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, பாக்.பிரதமரின் வருகையினூடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாக்.பிரதமர் இம்ரான்கானைச் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உற்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போது, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவை தவிர்க்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கொல கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாக். பிரதமரைச் சந்தித்து சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித்தாராமையும், அதற்குச் சொல்லப்பட்ட பாதுகாப்புக் காரணங்கள் போலியானவை என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி பாக்.பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்த நாளில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு ரவூப் ஹக்கீம் அவர்களால் மும்மொழியிலும் மிக உணர்ச்சிகரமான கருத்துக்கள் வழங்கப்பட்டன.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த பாக்.பிரதமரைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எப்படியாவது ஒரு முடிவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பாக்.பிரதமரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்வதில் ரவூப் ஹக்கீம் முனைப்போடு செயற்பட்டார்.
இவ்வாறான நிலையில் தான் பாக்.பிரதமருக்கு இலங்கைப் பிரதமரால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்திற்கு பாராளுமன்ற கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் பிரதமரால் அலரி மாளிகைக்கு ரவூப் ஹக்கீமும் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தை இராஜதந்திரமாகப் பயன்படுத்தி பாக்.பிரதமரைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும், ஒரு நாட்டின் பிரதமர் வருகை தந்திருக்கும் நிலையில், இலங்கை நாட்டின் பிரதமரின் அழைப்பை இச்சூழ்நிலையில் தட்டிக்கழிப்பது ஆரோக்கியமானவொன்றாக அமையாது என்ற காரணங்களால் ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், கலந்து கொண்ட பின்னணியிலேயே பாக். தூதுவராலய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
காலிமுகத்திடலில் ரவூப் ஹக்கீமால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உரியவர்களின் காதுகளுக்குச் சென்றடைந்திருக்கிறது என்பது பாக்.தூதுவராலய அதிகாரிகளின் கருத்துகளிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக அமைந்திருந்ததாக அறிய முடிகிறது. இதன் விளைவால் பாக்.பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதற்கான நேரம் உறுதிப்படுத்தப்பட்டது.
ரவூப் ஹக்கீம் அலரி மாளிகை விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டதை பல புத்திஜீவிகள் இராஜதந்திர நகர்வாகப் பார்க்கிறார்கள். ஆனாலும், சில மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் ரவூப் ஹக்கீமின் காலிமுகத்திடல் உரை மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்த நிலையில், தங்களின் அரசியலுக்கு இவை சவாலாக அமையுமென்பதால் ரவூப் ஹக்கிம் மீது அதிருப்தியை ஏற்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு முகநூலில் மிக கேவலமான விமர்சனங்களை வெளியிட்டதைப் பார்க்கலாம். இவ்வாறானவர்கள் எல்லா நிலைகளிலும் அரசியல் செய்ய முற்படுவது சமூகத்திற்கான சாபக்கேடாகும்.
ரவூப் ஹக்கிம் மீது கொண்ட காழ்ப்புணர்வு அவரின் முயற்சிகளை மறுதலித்து எழுதச் செய்ததைப் பார்க்கலாம். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புள்ளி போட்டுக்கொள்ளும் அரசியலைச் செய்ய நினைப்பவர்களுக்கு மத்தியில் இரகசியமாக சமூக நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்படுபவராக ரவூப் ஹக்கீம் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார்.
காலிமுகத்திடலில் அரசாங்கத்தை விமர்சித்தவர் இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதைப் பேசுபவர்கள் அங்கு கலந்து கொண்ட ஏனையவர்கள் தொடர்பான கவனஞ்செலுத்தாமை ரவூப் ஹக்கீமை மாத்திரம் குறி வைத்துத் தாக்குவதை தங்களின் தொழிலாகக் கொண்டவர்கள் என்பது புரிகிறது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனங்களுக்கு உட்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கலந்து கொண்டதைப் பார்க்கும் போது, மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழர்களுக்குச் சார்பாக அரசாங்கத்திற்கெதிரான பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அலரி மாளிகை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதை தமிழ்த்தரப்பு இராஜதந்திர நகர்வாகப் பார்க்கிறார்கள் தவிர, விமர்சனங்களை மேற்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாஸ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்ற பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இவைகள் அரசியல் இராஜதந்திர நகர்வுகள். இவைகளைப் பார்த்தும், பாடம் கற்றுக்கொள்ளாது, தங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக ரவூப் ஹக்கீமை தவறாகச் சித்தரிப்பதில் நியாயமில்லை.
ஒரு கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு செயற்படும் உரிமையுள்ளது. முஸ்லிம்களின் பிரச்சனை தொடர்பாக யார் பேசினாலும், அழுத்தம் கொடுத்தாலும் தீர்வைத் தர வேண்டியது அரசாங்கம். ஜனாஸா விடயத்தில் எரிப்பை நிறுத்தும் நிலைப்பாட்டிற்கு பிரதமர் வந்திருக்கும் நிலையில், நாம் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
எனவே, ரவூப் ஹக்கீமின் காலிமுகத்திடல் தொடக்கம் அலரி மாளிகை வரையான செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
இதன் விளைவு மறுநாள் பாக்.பிரதமரைச் சந்திப்பதற்கான அனுமதி கிடைத்து ரவூப் ஹக்கீமின் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை வெளியிடுவதனூடாக ஏற்படும் அசௌகரியங்களை (இனவாதிகளுக்கு தீனி போடாது) தவிர்ந்து கொள்வதற்காக அவை தொடர்பாக கருத்துச் சொல்வதில்லை என கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக முடிவு செய்திருந்தனர்.
இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் பொதுப்படையான கருத்துக்களையே வெளியிட்டிருந்தார். இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்ததுடன், இதன் நன்மைகளை முஸ்லிம் சமூகம் அடைந்து கொள்ளும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனாலும், கலந்து கொண்டவர்களில் சிலர் குறித்த ஜனாஸா விடயம் தொடர்பாக கருத்துகளை எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி பகிர்ந்து கொண்டதைப் பார்க்கலாம்.
தொடர்ந்தும் இராஜதந்திரச் செயற்பாடுகளை ரவூப் ஹக்கீம் ஜனாஸா விடயத்தில் முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டிருக்கும் போட்டித்தன்மை, நீயா? நானா? என்ற வாதங்கள் சமூகத்தைப் பாதிக்கும் என்பதை கவனத்திற்கொண்டு சமூக விடயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
No comments