சர்வதேச சாதனை மாணவி ஷைரீனுக்கு ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த விருது
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இந்தோனேஷிய ஜாவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவி பாத்திமா ஷைரீன், 'சர்வதேச சாதனைக்கான ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சட்டத்தரணியாக பணியாற்றி வருகின்ற முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வியான மரியம் நளீமுடீன் அவர்களை ஸ்தாபகத் தலைவியாகக் கொண்டு இயங்கி வருகின்ற மன்சூர் பவுண்டேஷன் செயற்குழுவினருக்கு அவர் வழங்கிய ஆலோசனை, வழிகாட்டலில் இவ்விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பவுண்டேஷன் சார்பில் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், குறித்த மாணவியின் இல்லம் சென்று மேற்படி விருதையும் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் கையளித்துள்ளார்.
இதன்போது பாத்திமா ஷைரின் தனது பல்வேறுபட்ட திறமைகளுக்காக பெற்றிருக்கின்ற நூற்றுக்கு மேற்பட்ட வெற்றிக்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பார்வையிட்ட கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், அவரை வியந்து பாராட்டினார்.
சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் சுமார் 25 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 400 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் எமது மண்ணைச் சேர்ந்த இம்மாணவி, புவியியல் தொடர்பான போட்டியில் பங்குபற்றி, தங்கப்பதக்கத்தை வென்று, நமது நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் புகழைத் தேடித்தந்திருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனைத் தொகுதியில் சேவையின் சிகரமாகத் திகழ்ந்த எமது தந்தை வழியில் எமது பிரதேசத்தில் கல்விக்காக கரம் கொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசன் ஊடாக அதன் தலைவியும் எனது சகோதரியுமான சட்டத்தரணி மரியம் நளீமுடீன் அவர்கள், கடல் கடந்திருந்தாலும் இம்மண்ணின் சாதனையாளர்களை கெளரவிக்கும் உன்னத பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அதன் ஓர் அங்கமாகவே சர்வதேச சாதனை மாணவி இனாம் மௌலானா பாத்திமா ஷைரீன், மன்சூர் பவுண்டேஷனால் விருதும் பண முடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
இம்மாணவியின் திறமைகளை அவரது வீடு சென்று, நேரடியாக கண்டறிந்துள்ளோம். அவரது எதிர்காலத் திட்டங்கள், குறிக்கோள்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளோம். அவற்றுக்கு மன்சூர் பவுண்டேஷன் என்றும் பக்கதுணையாக இருக்கும் என்பாதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச சாதனை மாணவி பாத்திமா ஷைரீனின் ஆற்றல், திறமைகளுக்காக அவரை கௌரவிக்குமுகமாக கல்முனை மாநகர சபையில் பாராட்டுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சமூகத்தினால் 'துர்ரத்துல் மஹ்மூத்' (விலைமதிக்க முடியாத சொத்து) எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான ஆராய்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்திற்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments