Breaking News

தமிழர் போராட்டத்தில் முஸ்லிம்களை இணைத்துவிட்டது யார் ? விமர்சிப்பவர்கள் யார் ? பலயீனம் எங்கே ?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழர்களின் சாத்வீக போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து உணர்ச்சிபூர்வமாக முழு ஆதரவு வளங்கியதானது சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது முஸ்லிம்களின் ஜனாசாக்களை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எரிக்கின்ற நிலையில், அதனை கண்டிக்காமல் ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுக்கின்ற சிலர், தமிழ்-முஸ்லிம் சமூக ஒற்றுமையை விமர்சிப்பது மட்டுமல்லாது, தூக்கமில்லாமல் அலைந்து கொண்டிருப்பது போன்று தெரிகின்றது.  

எந்தவித கள்ளம், கபடமும் இல்லாத முஸ்லிம் மக்கள், தமிழர்களின் போராட்டத்தில் பல திசைகளிலுமிருந்து அலை அலையாக இணைந்து கொண்டார்களென்றால், இதற்கு காரணம் என்னவென்று ஆராயாமல், முழு சமூகத்தையும் விமர்சிப்பதன் மூலம் தாங்கள் யார் என்பதனை சுய பரிசோதனை செய்ய தவறிவிட்டனர். 

தமிழர்களின் போராட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொள்வது இது புதிய விடயமல்ல. சுதந்திரத்திற்கு பிந்திய தமிழர்களின் அஹிம்சை போராட்டத்திலும், பின்பு உருவான ஆயுத போராட்டத்திலும் அனைத்து தமிழ் இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞ்சர்கள் பங்களிப்பு செய்து உயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள். 

பின்னாட்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் அல்லது ஜே.ஆர், பிரேமதாசா ஆகியோர்களின் ஆட்சியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக இரு சமூகமும் அரசியல்ரீதியாக இரு துருவங்களாக பிரிந்தது.

ஆனால் இன்று ஒற்றுமைப்பட்டு தமிழ் பேசும் சமூகம் என்ற ரீதியில் இரண்டறக்கலந்து அரசுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், இது திட்டமிடப்பட்டதா ? அல்லது சூழ்நிலையா ? அல்லது உணர்ச்சியின் வெளிப்பாடா ? என்று எவரும் சிந்திக்கவில்லை. 

அதாவது இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்குக்கூட அனுமதிக்கவில்லை. அத்துடன் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்து வருகின்றது. 

இவ்வாறான அடக்குமுறைகளை துணிவுடன் தட்டிக்கேட்பதற்கோ, அல்லது முஸ்லிம் மக்களை ஒழுங்கமைத்து அஹிம்சை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கோ முஸ்லிம் சமூகத்தில் தலைவர்களோ, பிரதிநிதிகளோ இல்லாத நிலையில், பாராளுமன்றத்தில் துணிச்சலுடனும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழ் தலைவர்கள் மட்டுமே முஸ்லிம்களுக்காக பேசினார்கள்.

அவ்வாறு பேசிய தமிழ் தலைவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டிய தேவை முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. அதனை வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் அரசியலுக்கு அப்பால் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே ஆட்சியாளர்கள் செய்துவருகின்ற அடக்குமுறையினையும், முஸ்லிம் தலைவர்களின் இயலாமையையும் பற்றி சிந்திக்காமல் தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் மக்கள் தங்களின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவதில் என்ன தவறு உள்ளது. 

இந்த ஒற்றுமையை சகிக்க முடியாதவர்கள், விமர்சிப்பதை தவிர்த்து அமைதியாக இருப்பது சிறந்தது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது



No comments

note