Breaking News

தமிழர்களை போராட தூண்டியது யார் ? உணர்வுகளை ஊட்டியது எது ? முஸ்லிம்களின் தலைவிதி ?

முள்ளியவாய்க்கால் பேரவலத்துடன் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு காணாமல் போனவர்களின் உறவுகளினால் தொடர் போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான மக்கள் போராட்டம் மாபெரும் எழுட்சி போராட்டமாக பார்க்கப்படுகின்றது.


யுத்தத்திற்கு பின்பு 2015 தொடக்கம் 2019 வரையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களின் விடுதலை உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டது. அதாவது நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு முழுவதிலும் ஏராளமான தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.


அத்துடன் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கும், மாவீரர்நாள் அனுஸ்டிப்பதற்கும், தமிழர்களின் தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை பகிரங்கமாக கொண்டாடுவதற்கும் மற்றும் 2018 இல் முள்ளியவாய்க்கால் நினைவுத்தூபியினை யாழ். பல்கலைக்கழகத்தில் அமைப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை.   


அதுமட்டுமல்லாது தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்துகொண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கிவந்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விரைவில் கிடைத்துவிடும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினர். 


ஆனால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, முள்ளியவாய்க்கால் மனிதப்படுகொலைக்கு பொறுப்பு கூறல், காணாமல்போனோர் மற்றும் நீண்டகாலமாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விவகாரங்களில் மெதுமையான போக்கினையே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடைப்பிடித்தனர். 


இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலயீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திய தமிழ் தேசியத்திற்கு எதிரான சில சக்திகள், அபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், கடும்போக்கு சக்திகள் தமிழ் தேசிய உணர்வினை வெளிப்படுத்தினர்.  


இதனால் கடந்த 2020 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாரிய பின்னடைவை சந்தித்ததுடன், தமிழ் தேசியத்திற்கு எதிரான சில சக்திகளும், தமிழ் கடும் போக்காளர்களும் தமிழ் மக்களின் ஆதரவில் வெற்றிபெற்றிருந்தனர்.    


அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் சிதைவடைந்து ராஜபக்சாக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பேற்றியது. அதன்பின்பு தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தலைகீழாக மாறியது.


அதாவது ராஜபக்ஸவினர் ஆட்சியை கைப்பேற்றிய உடனேயே பதின்மூன்றாவது திருத்தத்தினை நீக்கிவிட்டு மாகாணசபை முறைமையை ஒழிப்பது பற்றி பிரச்சாரத்தினை மேற்கொண்டதுடன், மறுபுறத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றபோர்வையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரைகளை அமைக்க ஆரம்பித்தனர்.  


அதுமட்டுமல்லாது போரில் உயிரிழந்த தங்களது உறவுகளை நினைவுகூறுவதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியதுடன், தமிழர்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிக்கின்ற பிரபாகரனின் புகைப்படத்தினை காட்சிப்படுத்துவதற்கும் தடை விதித்தனர். 


இறுதியாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளியவாய்க்கால் நினைத்தூபியினை மிகவும் தந்திரமாக உடைத்ததன் காரணமாக தமிழர்கள் எழுற்சிகொண்டதுடன், கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அரசுக்கு எதிராக போராட தூண்டப்பட்டனர்.  


அதாவது அழுத்தங்கள் அதிகரிக்கின்றபோது மக்களின் போராட்ட குணங்கள் எழுட்சிபெறும் என்பதுபோல, அமைதியாக இருந்த தமிழர்களிடம் தங்களது இறுக்கமான அழுத்தங்களை இன்றைய அரசாங்கம் பிரயோகித்ததன் காரணமாகவே தமிழ் மக்கள் உணர்வுகளுடன் மீண்டும் போராடுவதற்கு வீதிக்கு வந்துள்ளனர். 


இந்த அழுத்தங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்கள் மீதும் மிகவும் கடுமையாக பிரயோகிக்கப்படுகின்றது. ஆனால் முஸ்லிம்களுக்கு முற்போக்கு அரசியல் தலைமை இல்லாததன் காரனமாகவுனம், இருக்கின்றவர்கள் அற்ப சலுகைகளுக்கு பின்னால் செல்வதனாலும் முஸ்லிம்களை வழிநடாத்த யாருமில்லாத அநாதை சமூகமாக உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது






No comments

note