கல்முனை மாநகர சபையினால் 12ஆம் வட்டாரம் புறக்கணிக்கப்படுகிறதா? உண்மையில்லை என்கிறார் மாநகர முதலவர் ஏ.எம்.றகீப்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் அனைத்து சேவைகளும் இன, மத, பிரதேச பாகுபாடின்றி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 12ஆம் வட்டார தமிழ் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இன்று புதன்கிழமை (10) இரவு கருத்து வெளியிடும்போதே முதல்வர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிப்பதும் எதிர்ப்பதும் உறுப்பினர்களது சுதந்திரமாகும். விரும்பியோ விரும்பாமலோ கல்முனை மாநகர சபையில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என இரண்டு அணிகள் இருக்கின்றன. ஆளும் கட்சியானது எதிர்க்கட்சியையோ அல்லது எதிர்க்கட்சியானது ஆளும் கட்சியையோ ஆதரிப்பதில்லை என்பது அரசியல் யதார்த்தம்.
எவ்வாறாயினும் கல்முனை மாநகர சபையின் சிக்கலான அரசியல் சூத்திரத்திற்கு மத்தியில் தமிழ் கட்சிகளின் சில உறுப்பினர்கள் எமது ஆளும் தரப்பை ஆதரிக்கின்றனர். மாநகர சபை ஊடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே அவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். சிலர் எதிர்த்து நிற்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் எவ்வித நியாயமான காரணமுமின்றி, வேண்டுமென்றே மாநகர சபை ஆட்சியை குழப்பும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.
அவ்வாறான ஒரு உறுப்பினரே தனது பிரதேசம், மாநகர சபை நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருகின்றார்.
இந்த உறுப்பினர் பிரதிநித்துவம் செய்கின்ற 12ஆம் வட்டார தமிழ் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான 06 மாத காலத்தில் மாத்திரம் சுமார் 225 தெரு மின்குமிழ்களும் 15 கோப்ரா எல்.ஈ.டீ. மின்விளக்குத் தொகுதிகளும் மாநகர சபையினால் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறே திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் துப்பரவு பணிகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தனை சேவைகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி அந்த வட்டாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த உறுப்பினர் உண்மைகளை மறைத்து, தனது பகுதிக்கு மின்குமிழ் கூடத்தரவில்லை என்று விசமத்தனமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மாநகர சபையினாலும் என்னூடாகவும் இவர் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, மறுபுறம் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை விதைத்து நயவஞ்சகத்தனமாக செயற்பட்டு வருகின்றார்.
தெரு மின்விளக்கு பராமரிப்பு மற்றும் புதிய மின்குமிழ் பொருத்தும் விடயங்களில் உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு மேலதிகமாக வணக்கஸ்தலங்கள், நிறுவனங்கள், மற்றும் அமைப்புகளினதும் பொது மக்களினதும் நேரடி வேண்டுகோள், முறைப்பாடுகளை கவனத்திலெடுத்து நிறைய மின்குமிழ்கள் போடப்படுகின்றன. 12ஆம் வட்டாரத்தில் எந்த இடத்திலாவது தெரு விளக்கு பழுதடைந்திருந்தால் பொது மக்கள் மாநகர சபைக்கு நேரடியாக முறைப்பாடு செய்வார்களாயின், அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் உறுப்பினர்கள் அரசியல் இலாபம் தேடுவதற்கு இடமளிக்கத் தேவையில்லை.
மாநகர சபையில் ஊழல் இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற இவ்வாறான உறுப்பினர்கள், ஏன் அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவில்லை. யாராவது ஒருவர் அவ்வாறான முறைப்பாட்டை செய்கின்றபோது விசாரணைகள் நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
மாநகர சபையின் நிதி சம்மந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் மத்திய கணக்காய்வு திணைக்களம், மாகாண கணக்காய்வு திணைக்களம், பாராளுமன்ற கோப் குழு என்பவற்றினால் பரிசீலிக்கப்படுகின்றன. குறைந்தது 03 மாதங்களுக்கு ஒரு முறையாவது அக்கணக்காய்வு உத்தியோகத்தர்கள் மாநகர சபைக்கு நேரடியாக வருகைதந்து கணக்கு விபரங்களை ஆராய்ந்து செல்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக நான் முதல்வராக பதவியேற்ற பின்னர் கல்முனை மாநகர சபையில் உள்ளக கணக்காய்வு பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் பரீட்சிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பட்ஜெட் தொடர்பில் ஐய வினாக்கள் எவையுமில்லாத ஒரு சபையாக கல்முனை மாநகர சபை மாத்திரமே இருக்கிறது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும்.
ஆனால் எம்மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்கள், பொய்களை இட்டுக்கட்டி, மாநகர சபையில் ஊழல் நடப்பதாகத் கோஷமிடுகின்றனர். இதன் மூலம் தம்மை மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள் போன்று காட்டிக்கொண்டு பிரபல்யம் தேடி வருகின்றனர்.
குறித்த உறுப்பினரைப் பொறுத்தவரை பணக்கொடுக்கல் வாங்கலில் மோசடி செய்து, சிலரது கடன்களை கொடுக்காமல் ஏமாற்றியதனால் கல்முனை நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கையின்போது இவர் இணங்கிக்கொண்டதன் பேரில் மாநகர சபை உறுப்பினருக்கான மாதாந்த கொடுப்பனவில் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாவை மாநகர சபை செலுத்தி வருகின்றது.
இவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்விலும் சரி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்ற இந்த உறுப்பினர் சாத்தான் வேதம் ஓதுவது போன்று எம்மை நோக்கி விரல் நீட்டுகின்றார்.
அரசியலில் ஒழுக்கம், நாகரிகம் என்பது கிஞ்சித்தும் கிடையாத ஒரு பேர்வழி இவர். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதற்காக தமிழ் மக்களிடையே தன்னை ஒரு வீரராக காண்பித்து, அவர்களின் வாக்குகளை சூறையாடலாம் என்ற நப்பாசையில் செயற்பட்டு வருகின்றார்.
கல்முனை தமிழ்- முஸ்லிம் சமூகத்தினரிடையான நீண்ட கால நல்லுறவை முறிப்பதற்கும் புரிந்துணர்வின்மையை ஏற்படுத்துவதற்கும் தூபமிடும் செயற்பாடுகளை இவர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இவரை மக்கள் அங்கீகரிப்பார்களாயின் அதை விடக்கேவலம் வேறெதுவுமிருக்காது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கருணாவுடன் மறைமுக உறவைப்பேணி, அவரது ஒற்றனாக இருந்து, கோடீஸ்வரன் உட்பட தனது கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து, இம்மாவட்டத்தின் தமிழ் பிரநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் துரோகத்தனத்திற்கு துணைபோயிருந்த இவரது செயகீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை நாங்கள் அறியாதவர்களல்ல.
அரசியல் அரிச்சுவடியோ மாநகர சபைகள் கட்டளைகள் சட்டம் பற்றி அணுவளவும் அறிவோ தெளிவோ இல்லாத இவர் போன்ற சிலர் இம்முறை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக வந்திருப்பது இந்த சபைக்கும் மக்களுக்கும் பெரும் சாபக்கேடாகும்.
இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்றபோதிலும் அவர்களின் சுயநல, சமூக விரோத செயற்பாடுகளை தோலுரித்துக் காட்ட வேண்டியிருக்கிறது- எனவும் கல்முனை மாநகர முதலவர் மேலும் தெரிவித்தார்.
No comments