Breaking News

முஸ்லிங்களின் தேசப்பற்றை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிந்து கொண்டு பொதுவெளியில் பேச வேண்டும் - மாநகரசபை உறுப்பினர் ஷிபான் விளக்கம்.

நூருல் ஹுதா உமர்

நம் நாட்டின் வரலாற்று நெடுகிலும் அன்றுதொட்டு இன்றுவரை நாட்டின் இறைமைக்கு பங்கம் இல்லாமல் வாழ்ந்து வரும் ஓர் இனமாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தலாம். இலங்கையில் நடந்த கொடூர யுத்தத்தின் போது கூட முஸ்லிம்கள் தேசப்பற்றோடு அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் உயிர்களை காவுகொடுத்தும், பொருளாதார ரீதியாகவும்  யுத்தத்தில் இழந்தவை ஏராளம்.

மாத்திரமல்லாமல், ஏவல்நாய்களைக் கொண்டு சஹரான் என்கின்ற கொடூரன் செய்த இழி செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நின்றதும், அவனுடைய குழுவை காட்டிக்கொடுத்ததும், அவர்களுடைய உடலைக் கூட முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்ய முடியாதென இஸ்லாமிய மக்கள் தீர்ப்பு வழங்கி முஸ்லிம் சமூகம் நாட்டுப்பற்றை மீண்டும் பகிரங்கமாக நிறுவியுள்ளது.

ஆனால், அமைச்சர் சரத் வீரசேகர முஸ்லிம்களை ஒரு சிறு குழு எனவும் நாட்டை நேசிப்பவர்களாயின் ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதே என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் அண்மைய அறிவிப்பு தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ. எம். ஷிபான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,  

அமைச்சர் அவர்களுக்கு அவரது துறையோடு தொடர்புபடுத்தியே பதில் கூற வேண்டும். அண்மையில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அவர்கள் பாராளுமன்றில் உரையாற்றும்போது
நீங்கள் யுத்த காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

நீங்கள் முஸ்லிம்களுக்கு நாட்டை நேசிப்பது பற்றி கற்றுக்கொடுக்க வருவதானது, ஊர்காவற்படையினர் புலனாய்வு துறையினருக்கு எவ்வாறு புலனாய்வு வேலைகளை செய்வது என உபதேசம் செய்வதை போன்றதே. நீங்கள் புலனாய்வு துறையில் பல பிரசித்தி பெற்ற முஸ்லிம்கள் இருந்ததை நாம் கூறி அறிய வேண்டியதில்லை.
 
“யுத்த வெற்றியின் பெருமை அரசியல் தலைமைகளுக்கே செல்ல வேண்டும்” என நீங்கள் அண்மையில் கூறிய கருத்தினைப் போன்று  ஒரு முஸ்லிம் புலனாய்வு அதிகாரியேனும் கூறி பாதுகாப்பு படையினரை சங்கடத்தில் ஆழ்த்தினார்களா ? உங்களுக்கு பிரசித்தி பெற்ற புலனாய்வுத்துறை அதிகாரி முத்தலிப் அவர்கள் எவ்வாறு நாட்டை நேசித்தார்கள் என நாம் நினைவுபடுத்த வேண்டியுள்ளது கவலைக்குரியதே.

யுத்த காலத்தில் முத்தலிப் அவர்கள் தன்னை கொலை செய்ய இலக்கு வைத்து வந்த தற்கொலை குண்டுதாரியுடன் நேரடியாக கதைத்து விட்டு வந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகின்றோம்.
கரணம் தப்பினால் மரணம் என்பதை போல் தனது உயிரை துச்சமென மதித்து செயற்ப்பட்ட முத்தலிப் அவர்கள் நீங்கள் கூறும் அந்த சிறு குழு என்ற சமூகத்தை சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டீர்களா? அமைச்சர் அவர்களே!

நாட்டை நேசிக்கும் விடயம் என வரும்போது  உயிரை துச்சமென மத்தித்து செயற்படும் சமூகமே முஸ்லீம் சமூகம். சிறுபான்மையினரின் உணர்வுபூர்வமான விடயங்களில் திட்டமிட்டு அடாவடித்தணம் செய்துவிட்டு ,தேசப்பற்று, தேசத்துரோகம் என நீங்கள் வீர வசனம் பேசுவது வெறுமனே அப்பாவி சிங்கள மக்களை வெறுப்பேற்றுவதற்காகவே அன்றி வேறொன்றுக்குமாகவல்ல என குறிப்பிட்டுள்ளார்.




No comments

note