Breaking News

'பாஸ்' விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை; கல்முனை மாநகர சபை அறிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு 'பாஸ்' (Pass) வழங்குவதில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இது விடயமாக கல்முனை மாநகர சபை விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முடக்கப்பட்டுள்ள பொது மக்களின் நலன் கருதி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வைத்திய சேவைகள் தடையின்றி அவர்களுக்குக் கிடைப்பதற்காக மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பொருட்டு குறித்த பிரதேசங்களினுள் சென்று உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் குறித்த நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என்ற அறிக்கையின் பின்னர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சிபாரிசு செய்யப்படும் வியாபாரிகளுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் மாத்திரமே மாநகர சபையினால் விசேட அனுமதிப்பத்திரம் (பாஸ்) வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நடவடிக்கையானது மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரின் ஆலோசனை, வழிகாட்டலில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விடயத்தில் எந்தவொரு உள்ளூர் அரசியல்வாதியினதும் தலையீடுகளுக்கு மாநகர சபையினால் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவர்களது சிபார்சுகள் எவையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இது விடயமாக முகநூல்களில் எவராவது அறிவித்தல் விடுத்திருந்தால், அது அவர்களது தனிப்பட்ட அரசியல் விளம்பரத்திற்கானதேயன்றி, மாநகர சபையின் pass வழங்கும் நடைமுறை தொடர்பிலான நிர்வாக நடைமுறைக்குட்பட்டதல்ல எனவும் அறிவிக்கப்படுகிறது.  

மேலும், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் குறைபாடுகள் நிலவுமாயின் அவற்றை சுட்டிக்காட்டுவதற்கும் தேவைகளை முன்வைப்பதற்கும் மாநகர சபையின் 0672226675 எனும் தொலைபேசி இலக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் சேவை வழங்குநர்களை மாநகர சபை கேட்டுக்கொள்கிறது.



No comments

note