எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி மரம் வளர்க்க வேண்டும் என்பதை நாங்கள் பயிற்றுவிக்க வேண்டும்- பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா
நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம்.நாஸீம்
இயற்கையாக இறைவன் அளித்த வரமான மரத்தை நமது சொந்த தேவைகளுக்காக அழித்ததன் விளைவு இன்று காற்றை காசு கொடுத்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. நமது எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி இயற்கையை நேசிக்க வேண்டும், எப்படி மரம் வளர்க்க வேண்டும் என்பதை நாங்கள் சிறந்தமுறையில் பயிற்றுவிக்கவேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை (18) மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதனுடாக குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பழமரக்கண்டுகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர்,
ஜனாதிபதியின் வீட்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதனுடாக குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் ஐந்து வருட திட்டமாகும். இந்த திட்டத்தினுடாக நீங்களே உங்களின் குடும்ப வருமானத்தை பெருக்கக்கூடியதாக பல திட்டங்கள் உள்ளது. இந்த பழமரக்கண்டுகள் உயர்ரக சந்தையில் விலைகூடிய பெறுமானத்தை தரும் மாமரங்களாகும். இதனை நீங்கள் சரியாக பராமரித்து வளர்ந்து வந்தால் நிறைய அனுகூலங்கள் உண்டு என்றார்.
682 குடும்பங்களுக்கு புதிய இன மரக்கண்டுகள் வழங்கி வைத்த இந்நிகழ்வில் சம்மாந்துறை தலைமை காரியாலய சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம். சலீம், சமூர்த்தி வலய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்களின் நிர்வாகிகள், சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments