ஜனாஸா எரிப்பில் எதை நம்புவது ? அதை நியாயப்படுத்தலாமா ? ராஜபக்சாக்களை முஸ்லிம்கள் ஏன் எதிர்த்தார்கள் ?
கொரோனாவின் தாக்கத்தில் மரணிப்பவர்களை அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் மாசுபடும் என்ற காரணத்தினாலேயே முஸ்லிம்கள் உற்பட அனைத்து மதத்தவர்களின் உடல்களும் எரிக்கப்படுகின்றதென்று ராஜபக்ச அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் தலைவர்களின் வழிகாட்டுதலில் ராஜபக்சாக்களை எதிர்த்து தேர்தலில் வாக்களித்ததன் காராமாகவே பழிவாங்கும் நோக்கில் ஜனாசாக்களை எரிப்பதாகவும், இதற்கு முஸ்லிம் தலைவர்களே பொறுப்பு கூற வேண்டுமென்றும் ஆளும் மகிந்த ராஜபக்சவின் சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கூறிவருகின்றார்கள்.
இந்த முரண்பாடான இரு கருத்துக்களில் எதனை ஏற்றுக்கொள்வது ?
ராஜபக்சாக்களின் முஸ்லிம் ஆதரவாளர்கள் கூறுவது போன்று ஜனாஸா எரிப்பானது ஓர் அரசியல் பழிவாங்கல் என்றால், அதனை அரசாங்கம் வெளிப்படையாக கூறுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்துடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியும்.
அவ்வாறில்லாமல் சுகாதார துறையை சேர்ந்த நிபுணர்களின் தலையில் மிளகாய் அரைத்தவாறு ஆட்சியாளர்கள் பொய் கூறிக்கொண்டு முஸ்லிம் சமூகத்தினை பழிவாங்குகின்றார்கள் என்பது ராஜபக்சாக்களின் முஸ்லிம் ஆதரவாளர்களின் பிரச்சாரத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.
அரசாங்கத்தின் இந்த ஏமாற்று அரசியலுக்கு ஏற்றாற்போல் சுகாதார துறையினர் கருத்துக்களை கூறுவதன்மூலம் தங்களது இனவாத செயல்பாட்டை அரங்கேற்றி வருகின்றார்கள்.
ஓர் ஜனநாயக நாட்டில் எந்தவொரு சமூகமும் தாங்கள் விரும்பிய கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ ஆதரவளிக்க முடியும். அவ்வாறு ஓர் சமூகம் தொடர்ந்து தங்களை எதிர்த்து வந்தால், எதிர்க்கின்ற சமூகத்தின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கையினை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லாமல் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக குறித்த சமூகத்தை பழி வாங்குவோமென்று வரிந்து கட்டுவதானது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகும். அதாவது அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்பது அதன் பொருளாகும்.
முஸ்லிம் தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்பாடுகளும், சுயநல அரசியலுமே முஸ்லிம் மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் 2015 தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ராஜபக்சாக்களை எதிர்த்து நின்றதற்கு முஸ்லிம் தலைவர்கள் மீது மட்டும் பழியை போடுவதானது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
யுத்தம் முடிவுற்றதன் பின்பு 2010 தொடக்கம் 2014 வரைக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.
அதாவது பொதுபல சேனா, ராவய பலய போன்ற சிங்கள இனவாத இயக்கங்களின் அட்டகாசங்கள் உச்ச நிலையில் இருந்தது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக தீயிடப்பட்டதுடன், ஹலால் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதில் தலையீடு, பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை, மத்ரசாக்கள் கண்காணிக்கப்பட்டது போன்ற ஏராளமான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இதனால் விரக்தியுற்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வழங்கிய அழுத்தம் காரணமாகவே இறுதி நேரத்தில் முஸ்லிம் தலைவர்கள் காதல் கடிதங்களை வழங்கிவிட்டு ராஜபக்சாக்களை விட்டு விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே இவ்வாறு ராஜபக்சாக்களின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை மூடி மறைத்தவாறு ராஜபக்சாக்களுக்கு வாக்களிக்காத காரணத்தினால்தான் முஸ்லிம்கள்
பழிவாங்கப்படுகின்றார்கள் என்று ஒரே வார்த்தையில் கூறுவதானது அவர்களது செயல்பாட்டினை நியாயப்படுத்துவதாக அமைகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments