நாடே ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பதிலிருந்து எரிப்பின் வலி எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் : எம்.ஐ.எம்.ஏ. மனாப்.
நூருல் ஹுதா உமர்
கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மனிதாபிமானம் இல்லாமல் எரிக்கப்படும் அவலம் எமது இலங்கையில் மட்டுமே அரங்கேறுகின்றது. இச் செயலானது வெறுமனே ஒரு மதத்தின் மீது கொண்ட வெறுப்பாகவே அன்றி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகவே நாங்கள் நோக்குகிறோம் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தெரிவித்தார்.
சமகால நிலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேலும் தனது கருத்தில்
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்பதை அந்தந்த மார்க்கங்கள் தெளிவாக விளக்கியுள்ளதையும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த தோற்றாளரின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை ஆரம்பத்திலையே பல துறைசார் நிபுணர்கள் இவ்வரசுக்கும் அரசின் சுகாதார துறைக்கும் தெளிவாக எடுத்து கூறியும் அது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் விழுந்தபாடில்லை.
பிறந்து 20 நாட்கள், 45 நாட்கள் மட்டுமே ஆன சிசுக்களை வேகவேகமாக எரிக்கும் அளவுக்கு இந்த நாட்டின் சுகாதார துறை மனிதாபிமானம் இழந்திருப்பது வேதனையளிக்கின்றது. இந்த நாட்டின் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்களின் மத உரிமைகளை மீறிய இந்த செயற்பாடு மனிதாபிமானமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
கபன் சீலை போராட்டம் ஒன்றை இந்த நாட்டில் எல்லா இன மக்களும் பிரதேச எல்லைகளை தாண்டி நாடுமுழுவதிலும் முன்னெடுக்கும் போதே இந்த எரிப்பின் வலி எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு சாராரை பழிவாங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை நடைபெற்று வருகின்றது எனும் குற்றசாட்டை பொய்யாக்கி தொடர்ந்தும் வாயால் வாக்குறுதியளிப்பதுடன் மட்டும் நின்று விடாமல் இந்த நாட்டின் பிரஜைகளின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் மரியாதை கொடுத்து உடனடியாக செயற்பாட்டில் இறங்கி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை அவர்களின் மத அனுஷ்டானங்களை பேணி நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க இந்த நாட்டின் அரசாங்கமும் அதுசார் அதிகாரிகளும் முன்வர வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் அடங்கலாக சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொண்டார்.
No comments