அடுத்த தேர்தல் வரை ஜனாஸா எரிப்பு நிறுத்தப்படுமா என்பது சந்தேகம் தான் ; உலமா கட்சி தலைவர் முபாரக் மௌலவி !
நூருல் ஹுதா உமர்
ஜனாஸாக்களை அடக்கும் அனுமதி பெற மிக கவனமாக காய்கள் நகர்த்தப்பட்டன. எரிக்கலாம் என்பதை பிரகடனப்படுத்திய ரணில் ஆதரவாளர் அனில் ஜயசிங்கவை கூட இந்த அரசு இடம் மாற்றியது. தீவிரவாத போக்குடைய பௌத்த மதகுருக்களின் காதுகளுக்கு போகாமல் தீர்க்கும் முயற்சிக்கு பிரதமரும் ஒத்துழைத்தார். வெண்கொடி, மண்கொடிக்கெல்லாம் முன்பாகவே வரண்ட பிரதேசத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் சுகாதார குழுவை வேண்டியிருந்தார். சம்மாந்துறைக்கும் அனுமதி கிடைத்தது. வாசுதேவ நாணயக்காரவும் ஒத்துழைத்தார் என உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் எங்கே இதுவெல்லாம் நடந்து விடுமோ, ஜனாஸாக்களை அடக்க அனுமதி கிடைத்தால் முஸ்லிம்கள் அரசின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என பயந்த ஜே.வி.பியும் சில முஸ்லிம் குள்ள நரிகளும் சேர்ந்து வெண் கொடி கட்டி குழப்பி விட்டனர். சில மொக்கைகள் பேஸ் புக்கில் சமூகத்தை உசுப்பேற்றினர். அரசில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் இல்லை என்பது போன்று அரசை, ஜனாதிபதியை கேவலப்படுத்தி எழுதினார்கள். காட்டுக்குள் இருந்த பிரபாகரனையே கண்டு பிடித்த கோட்டாவுக்கு இந்த எழுத்தெல்லாம் தெரியவராது என நினைத்தனர் பத்தாம் பசலிகள்.
மறைந்த தலைவரை யாராவது ஏசினால் அவர் பணிய மாட்டார், திருப்பி அடிப்பார். இது கூட புரியாதவர்களால் வேண்டுமென்றே இவ்விடயம் பூதாகரமாக்கப்பட்டது. 70 வீதம் முஸ்லிம்கள் உள்ள கல்முனையின் 70 வீத இடத்தை கையகப்படுத்தி விட்டு அதனை கூட விட்டுக்கொடுக்க முன் வராத, வட மாகாண முஸ்லிம்களின் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு விரட்ட துணை போன தமிழ் அரசியல்வாதிகளும் தம் பாட்டுக்கு முஸ்லிம்கள் பக்கம் நின்று உசுப்பேத்தினர்.
இப்போது இது சிங்கள இனவாதிகளின் பேசு பொருளாயிற்று. அனுமதி கொடுத்தால் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்போம் என்கிறார்கள். எல்லாவற்றிலும் உசார் மடையர்களாகி வீழ்ந்து கிடக்கிறது முஸ்லிம் சமூகம். இனி அடுத்த தேர்தல் வரை எரிப்பு நிறுத்தப்படுமா என்பது சந்தேகம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
No comments