ஜனாஸாக்கள் எரிகிறது ஒருபுறம் !! அடக்கியவை மீள் எழும்புகிறது மறுபுறம் !
இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களில்கோவிட் -19 தாக்கத்தினால் மரணித்த சகோதரர்களின் ஜனாஸாக்களை எரிக்கக் கூடிய அவலநிலை இச் சமூக மக்களின் உள்ளங்களை உருக்குகின்றன. அந்த ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்வதற்கான உரிமையை பெற்றுக்கொள்ள போராடி வருகின்ற இந்த காலகட்டத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குள் மாளிகைக்காடு என்ற அழகிய கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் பூர்வீகம் தோற்று முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் காலமாகிய பின்னர் அடக்கம் செய்வதற்கான ஒரு மையவாடி அம் மக்களினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு அதில் ஜனாஸாக்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இது ஒரு சிறிய அழகிய கிராமமாக இருப்பதனால் அப்பகுதி மக்களை உள்ளடக்கி அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யக் கூடிய மையவாடியாக நீண்ட காலமாக இது காணப்பட்டு வருகின்றது.இக் கிராமம் கடலை அண்டிய கரையோர பிரதேசமாகும். கரையோர பகுதிக்குள்ளே அந்த மையவாடியும் அமைந்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் கிழக்கு கரையோரம் கடல் அரிப்புக்கு உள்ளாகின்ற அபாயகரமான சூழ்நிலை இந்த மையவாடியையும் விட்டு வைக்கவில்லை.
தற்போதைய கடல் அலையின் தாக்கத்தின் அதிகரிப்பும், கடல் அரிப்பின் வேகமும் அம் மையவாடியை சுற்றி அமைக்கப்பட்ட கல்வேலிகள் மீது தாக்கம் செலுத்தி மையவாடி மதில் வேலிகள் இடிந்து விழுந்து இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யக்கூடிய இந்த பூமிக்கு ஏற்பட்ட நிலையை கண்டு ஊர் மக்கள் நள்ளிரவிலும் கூட என் தாய் அடக்கம் செய்யப்பட்டுள்ளார், தன் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ளார், தன் சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற ஏக்க உணர்வோடும் மையவாடி நோக்கி அப்பிரதேச மக்கள் விரைகின்றனர். காரணம் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாக்களை கடல் அலை மீள் எழுப்புகின்றது என்ற அச்ச நிலையால்.
தன் உடன் பிறப்புகளை அடக்கம் செய்த அந்த ஜனாஸாக்களை கடல் அரித்து மேலிழுக்கும் செயலை யார் தான் தாங்க முடியும். எனவே இது உணர்வு பூர்வமான பிரச்சினையாகும். இதற்கான முறையான தீர்வு மிக அவசியமானதாகும். அடக்கப்பட்ட ஜனாஸாக்களை கடல் அலைகள் எழுப்புகின்றது என்ற செயலை மனித நேயம் கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இரவு பகல் பாராது ஜனாஸாக்களை பாதுகாக்க போராடுகின்றது அப்பிரதேச மக்கள். இலங்கை வாழ் உறவுகளே! இந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள்.
அரசியல் பிரமுகர்களே ! ,
பொது நல சேவையாளர்களே! ,
செல்வந்தர்களே! ,
மனிதநேயம் மிக்கவர்கள்! ,
இதற்கான தீர்வினை பெற்றுத்தர முன்வாருங்கள். முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிகின்றது ஒருபுறம் அடக்கிய ஜனாஸாக்கள் மேல் எழுகின்றது மறுபுறம் இதற்கு தீர்வு தான் என்ன?
தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ்.
மாளிகைக்காடு
No comments