கலையும்,இலக்கியமும் மனித உள்ளங்களை சாந்திப்படுத்த அரும்பணியாற்றுகின்றது - கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தெரிவிப்பு!
(சர்ஜுன் லாபீர்)
மனித குணங்களை நல்வழிப்படுத்துகின்ற முக்கியமான பங்கு கலைக்கு உண்டு.என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தெரிவித்தார்.
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும்,கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பிரதேச செயலக கலை விழா மற்றும் முனை இலக்கிய மலர் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
இலக்கணங்கள்,இலக்கியங்கள், சமூக சித்தாந்தங்கள் மற்றும் சமூக நடைமுறைகள் கூட மனிதனை நாட்டில் நல்ல பிரஜையாக வாழ்வதற்கும் மனிதனின் நற்குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் அரும் பணியாற்றியாற்றுகின்றன. அதேபோன்று கலை உணர்வுகளும்,கலை நிகழ்ச்சிகளும் அரும் பங்காற்றிக் கொண்டு வருகின்றன.
இந்த காலகட்டத்தில் கலாச்சார திணைக்களமானது இவ்வாறான நிகழ்வுகளை செய்வதற்காக குறித்தளவு நிதிப் பங்களிப்பு செய்தாலும் அதன் வெளிப்பாட்டு தன்மை, அதன் விளைவுகள் சிறந்ததாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதனையொட்டி அவை எதிர்கால சமூகத்திற்கு பயனுள்ளதாக்கப்பட வேண்டும் என்பதற்காக அவைகள் நூலுருவாக்கப்பட்டு சமூகத்திற்கு சேர்க்கப்படுகின்றது.
அந்த வகையில் கலை இலக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மூன்று முக்கிய பிரதேசங்களான கல்முனை,மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய 3 முனைகளையும் மையப்படுத்தி இந்த "முனை மலர்" நூல் வெளியிடப்படுகின்றது.
இதில் எமது பிரதேசத்தில் உள்ள கலை,கலாச்சார, பாரம்பரிய அம்சங்களை பிரதிபலிக்கும் விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.என்பது முக்கிய அம்சமாகும்.
மேலும் நமது நாட்டின் அரசாங்கம் கலை உணர்வு கொண்டோரின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறுபட்ட திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.எனவே இவ்வாறு அரசங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கலைஞர்கள் தங்களுடைய முழுமையான பங்களிப்பினை வெளிக்கொண்டு வந்து தேசிய ரீதியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபிபுல்லா,மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர்.எம்.என்.எம் ரம்சான்.பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,கலாச்சார அதிகார சபையின் செயலாளர் எஸ்.எல்.ஏ அஸீஸ்,கலாச்சார அதிகார சபையின் உப செயலாளர் பசீர் அப்துல் கையும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments