சமூக விடயங்களில் கட்சி அரசியலுக்கப்பால் முஸ்லிம் தலைமைகள் ஏன் ஒன்றுபட முடியாது. - சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்.
நூருள் ஹுதா உமர்.
இந்நாட்டு முஸ்லிம்கள் மீது தெளிவான உளவியல் யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் பெரியோர்கள் எல்லாத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. அதேநேரம் அதனை சாத்வீக வழியில் எதிர்கொள்ள தெரியாமல் முஸ்லிம் சமூகத் தலைமைகள் தடுமாறுகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்தும் உளவியல் யுத்தத்தை உளவியல் ரீதியாகவே எதிர்கொள்வதற்கு முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியாக தயார்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் அல்குர்ஆன் வழியில் வழங்கப்பட வேண்டும் என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்தார்.
அல்- மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்காவின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு சமகாலத்தில் சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு கருத்த அவர், தொடர்ந்தும் பேசுகையில்.
முஸ்லிங்கள் பொறுமையுடன் சாத்தியமான வழிமுறைகளில் கருமமாற்ற வேண்டியுள்ளதால் உளவியல் ரீதியில் யுத்தம் செய்து வாழ வேண்டியுள்ளது. இதயத்தில் ஈரமின்றி எங்கள் உணர்வுகளை மிதித்துக் கொண்டு ஒரே நாடு ஒரே சட்டம் நீங்கள் விரும்பியவாறு உண்ண முடியாது, உடுக்க முடியாது, மரணித்தால் அடக்கவும் முடியாது. மனித உரிமைகளையும் மனச்சாட்சிகளையும் குழிதோண்டிப் புதைப்பதால் எமது உடல்களுடன் நீதியும் எரிந்து மனசாட்சியுமழிந்து மனுநீதியும் மாண்டு போகிறது. வியாபாரத் தளங்கள், வீடுகள், புனித குர்ஆன் எரிக்கப்பட்டு அந்த வரிசையில் இப்போது உடல்களை எரிக்கிறார்கள்.
பொறுமையுடன் இன்னல்களை சகித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பலப்படுத்தி அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொண்டால் வெற்றி கிடைப்பது உறுதி.கொரோனா தொற்றுள்ளதாகக் கூறி ஜனாசாக்களை எரித்தே தீருவோமென வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் உளவியல் யுத்ததை எதிர்கொள்வதற்கு கட்சியரசியலுக்கப்பால் முஸ்லிம் தலைமைகள் ஏன் ஒன்றுபட முடியாது. பொறுமையை வலுப்படுத்த இஸ்லாமிய வரலாறுகளில் பொறுமை பற்றிக்கூறும் சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறப்படப்பட வேண்டும் அவ்வாறே ஜனாஸாக்களை எரித்து பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளின் போது சகித்துக் கொள்வது நம் சமூகத்தின் மிகப்பெரிய சவாலாகும்.
இதனை வெற்றிக்கொண்டால் பேரினவாதிகளின் சில விடயங்கள் இயல்பாக மாறிவிடும்.கிராமிய மட்டங்களில் ஊர்களை நிர்வகிப்பதற்கும் வழிகாட்டுவதற்குமான சபைகளை உருவாக்கி எல்லா தரப்பு மக்களையும் உள்வாங்கப்படவேண்டும். உலமாக்களால் குறிப்பிட்ட விடயங்களை மட்டுமே செய்ய முடியும் என்ற யதார்த்தத்தை ஏற்று நடக்க வேண்டும்.
உளவியல் யுத்தத்திலிருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சக்தி இறையச்சத்தை வளர்ப்பதும் மன வலிமையை அதிகரிப்பதுமாகும். அதற்கான செயற்திட்டத்தை திட்டமிடுவதே ஜம்மியத்துல் உலமாவின் மிகப்பெரிய பணியாகும். அரசியலமைப்பு உரிமைகள் பேரினவாதிகளால் மீறப்படுகின்றது என்பதற்காக முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆத்திரத்தை தீர்க்க முற்படாமல் ஆகவேண்டிய விடயங்களில் மொத்தச் சமூகம் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.
No comments