தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காக மக்களின் உயிருடன் விளையாட முடியாது : பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத்
நூருள் ஹுதா உமர்.
ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு தனிநபர்களினதும், சில குழுக்களினதும் நல்லது கெட்டவைகளுக்காகவும், அஜந்தாக்களுக்கவும் மக்களை பாதகத்தில் தள்ளிவிடும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத்துறை ஒருபோதும் சிபார்சினை வழங்க மாட்டாது என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை பகுதிவாரியாக முடக்கப்பட்டதை தொடர்ந்து சமூகத்தின் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை ஊடகவியலாளர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பிரதேசம் ஒன்றை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது என்பது கொவிட்-19 தொற்று பாரிய அளவில் சமூகத் தொற்றாக மாறி பல உயிர்களை காவு கொள்வதை தடுப்பதற்காகவும் மக்களை அசௌகரியமில்லாது நம்பிக்கையான சுகாதார வாழ்வை உறுதிப்படுத்தவும் எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அதிகாரம் கௌரவ முதல்வருக்கு இருந்தாலும் சமீபத்தைய நாட்களில் உருவான விமர்சனங்களையடுத்து இம்முறை தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கையை சுகாதார தரப்பே முன்னெடுத்தது. சுகாதார தரப்பு அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு ஒரு பிரதேசத்தை உட்படுத்த அதற்கான படிமுறைகள் நிறைய இருக்கின்றது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, வைரஸ் தொற்று பரவுகின்ற வேகம், தொற்று வைரஸை கண்டுபிடிக்க பரிசோதனைகளை செய்யக்கூடிய வசதி, மக்களின் பரிசோதனைகளுக்கான ஒத்துழைப்பு, மக்களின் சனத்தொகை அடர்த்தி, அப்பிரதேச மக்களால் பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகள், பொதுவிடங்களில் மக்கள் கூடுகின்ற அளவு, சுகாதாரத் துறையினரின் ஆளணி வசதி, ஏனைய பிரதேசங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து உள்வரும் வெளிச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்பவற்றுடன் அந்த பிரதேசத்தில் உள்ள அலுவலகங்கள், திணைக்களங்களின் ஒருமித்த ஒத்திசைவு என பல்வேறு நடைமுறைகள் உள்ளது.
அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கையானது அப்பிராந்திய மற்றும் அந்த மாகாண பணிமனையினால் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு கொழும்பிலுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அந்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முன்மொழியப்படும். அவர்கள் இருவரும் அந்த முன்மொழிவை தமது ஆளணியினரூடாக பரிசீலித்து கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைப்பார்கள். விசேட ஜனாதிபதி செயலணி ஆழமாக ஆராய்ந்து தனிமைப்படுத்தல் முடிவினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக அறிவிப்பார்கள்.
தனிமைப்படுத்தலில் இவ்வளவு விடயங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் சிறப்பான மக்கள் பணியை செய்து வரும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் மீது இருக்கும் அரசியல் காழ்புணர்ச்சிக்கும், பொறாமைதனத்திற்கும் தீனி போட இனவாதமாக, பிரதேசவாதமாக கதைகளை பரப்பி வருகிறார்கள். கல்முனை என்பது வர்த்தக தலைநகரங்களில் ஒன்று என்பதை நான் உட்பட யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் வர்த்தகத்தை விட மனித உயிர்கள் பெறுமானம் கூடியது. சிறிய பாதிப்புக்கள் இருந்த காலகட்டத்தில் அந்த சமூக தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இனவாத, பிரதேசவாத, அரசியல் அஜந்தாக்களும் தனிநபர் விருப்பு வெறுப்புக்களும் கூடியதால் வீரியமிக்க இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவது கஷ்டமாக உள்ளது. மக்கள் நலன் மிக்க எதை செய்தாலும் ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் கூச்சலிட ஆரம்பிக்கிறார்கள். பெரிய விடயங்களை கட்டுப்படுத்த போராடும் போது சிறிய விட்டுக்கொடுப்புக்கள் வேண்டும்.
கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றத்தை உண்டாக்க கல்முனை மாநகர முதல்வர் தலைமையில் வர்த்தக பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் இராணுவம், பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி நல்ல முடிவை பெற்றுள்ளோம். வியாபார நடவடிக்கைளை மீண்டும் வீரியமாக ஆரம்பிக்கவேண்டி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், ஆணையாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உயரதிகாரிகள் இணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது பிரதேச மக்களின் உயிர்களை மதித்து சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களை ஏற்று நடப்பதுடன் எல்லா விடயங்களையும் அரசியல், இனவாத, மதவாத, பிரதேசவாத கண்கொண்டு பாராமல் நேர்பட சிந்தித்து சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசங்கள் அணிந்து, கைகளை சவர்க்கரமிட்டு கழுவி, வீணான பயணங்களை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியதுடன் எல்லா மக்களும் இப்பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காரியாலயங்களில் நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைகளை பேணி நடப்பது இப்போது அவசியமான ஒன்றாகும் என்றார்.
No comments