Breaking News

கல்முனையில் ஹோட்டல்களை இரவு 8.00 மணிக்கு முன் மூடத் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் தற்காலிகமாக நாளை (16) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இரவு 8.00 மணிக்கு முன்னதாக மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மற்றும் பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் ஆகியோர் சந்தித்து, கலந்துரையாடியபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகள் இரவு நேரங்களிலும் திறந்திருப்பதனால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கேற்ற வகையில் விற்பனைக்காக ஹோட்டல்களில் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (16) தொடக்கம் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரைப் பகுதிகளிலும் கடைத்தெருக்களிலும் மற்றும் பொது இடங்களிலும் கூடி நிற்பதை பொதுமக்கள், கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன் இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அனைத்து அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் கடைகளிலும் கை கழுவுவதற்கான ஏற்பாடு அல்லது சனிடைஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் அனைத்து அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளுக்கு வருகை தருகின்ற அனைவரினதும் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் பதியப்பட வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காகவும் சரி வீடுகளை விட்டு வெளியேறுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் எக்காரணம் கொண்டும் தமது வீடுகளில் இருந்து வெளியேறக் கூடாது. இது விடயத்தில் அயலவர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். எவராவது வீட்டிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அயலவர்கள் தகவல் வழங்க முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொதுவாக கல்முனை மாநகர பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவது எனவும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.




No comments

note