ஒலுவில் துறைமுகம் மற்றும் சாய்ந்தமருது இறங்கு துறையை சரிசெய்து கொடுத்து மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துங்கள் : ஏ.எல்.எம். அதாஉல்லா.
நூருல் ஹுதா உமர்.
மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதற்கிடையில் சாய்ந்தமருதில் படகுகளில் தரித்து நிற்கக்கூடிய இறங்கு துறை இயற்கையாகவே உள்ளது. மாறி காலங்களில் தமது மீன்பிடி வள்ளங்களை தரித்து நிறுத்தக்கூடிய இடவசதி அங்கு இருக்கிறது. அதை ஒழுங்காக கட்டமைக்க பெரியளவிலான செலவுகள் வராது என்று நினைக்கிறேன். ஒலுவில் துறைமுகத்தை மாத்திரமல்லாது சாய்ந்தமருது இறங்கு துறையையும் சரிசெய்து கொடுப்பதன் மூலம் அப்பிரதேச மீனவர்களையும் தாண்டி மீன் சார் உற்பத்திகளில் பெரிய பொருளாதாரத்தை ஈட்டும் வாய்ப்பு இருக்கிறது என தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
காணி, கடல், பெருந்தோட்டம் இவைகள் நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தருவது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமரின் காலத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உயர்ந்த இடத்துக்கு இந்த நாட்டின் மீன்பிடி துறையை கொண்டு வருவார் என்று நம்புகிறோம். மீன்பிடி என்பது எமது நாட்டு மக்களின் பிரதான உணவுகளில் ஒன்று. வளைத்து கடல்கள் இருக்கும் தீவில் வாழும் நாங்கள் இந்த வளத்தை வைத்து மீன்கள் ஏற்றுமதி செய்வதில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடைய வில்லை.
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை கடந்த ஆட்சிகாலத்தில் மீனவர்கள் மட்டுமல்ல எதுக்கும் உதவாதது போன்று மாற்றியுள்ளார்கள். பிரதமரும், நானும் , மீன்பிடியமைச்சராக இருக்கும் நீங்களும் கலந்துரையாடி எடுத்த தீர்மானத்தின் படி மீன்பிடி துறைமுகமாக மாற்றி மீனவர்களுக்கு மட்டுமல்ல அந்த பிரதேசத்தில் கடலரிப்பினால் கஷ்டப்படும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது இன்று இன்றியமையாத ஒன்று. அது இந்த நாட்டின் பாரிய சொத்துக்களில் ஒன்று.
அது மாத்திரமின்றி அப்பிரதேச மீனவர்கள் தமது மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பாக அங்கு நிறுத்த முடியாமல் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதற்கிடையில்
சாய்ந்தமருதில் படகுகளில் தரித்து நிற்கக்கூடிய இறங்கு துறை இயற்கையாகவே உள்ளது. மாறி காலங்களில் தமது மீன்பிடி வள்ளங்களை தரித்து நிறுத்தக்கூடிய இடவசதி அங்கு இருக்கிறது. அதை ஒழுங்காக கட்டமைக்க பெரியளவிலான செலவுகள் வராது என்று நினைக்கிறேன்.
ஒலுவில் துறைமுகத்தை மாத்திரமல்லாது சாய்ந்தமருது இறங்கு துறையையும் சரிசெய்து கொடுப்பதன் மூலம் அப்பிரதேச மீனவர்களையும் தாண்டி மீன் சார் உற்பத்திகளில் பெரிய பொருளாதாரத்தை ஈட்டும் வாய்ப்பு இருக்கிறது. ஒலுவில் துறைமுகத்தில் மீன்களை பதனிடும் குளிர்சாதன அறைகளெல்லாம் இருக்கிறது. அதை நோக்கி சரியாக பயணிக்கிறீர்கள் அதை வெற்றிகரமாக செயற்படுத்த பிராத்திக்கிறேன்.- என்றார்
No comments