பன்முகத் திறன் வாய்ந்த ஆசான் நவாஸ் கல்விப் பணியிலிருந்து நாளை ஓய்வு
மூத்த ஆசிரியரும், புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் பல வருட காலம் முகாமையாளராக கடமையாற்றியவருமான எம்.எச்.எம்.நவாஸ் நாளை (2020.11.14) தனது 41வது வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
இவர் தனது முதல் நியமனத்தை புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் (1979.9.20) பெற்று கல்விப் பணியை ஆரம்பித்தார். அதன் பின்னர் கடையாமோட்டை முஸ்லிம் மகாவித்தியாலயம் (1980---1982), வட்டக்கண்டல் முஸ்லிம் ம.வி (1982--1985), தில்லையடி முஸ்லிம் ம.வி(1985--1986) ஆகியவற்றில் கடமையாற்றினார்.
அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு, தில்லையடி முஸ்லிம் ம.வியில் (1988--1990) பணியாற்றியதோடு, 1991.01.01- - 2020.11.14 வரை வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் கலவன் வித்தியாலயத்தில் கடமைப் பொறுப்பில் இருந்துள்ளார்.
இவர் புத்தளம் ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளராக 1999.02.22முதல் 2020.11.14 காலம் ஓய்வு நிலையை அடையும் வரை கடமையை மேற்கொண்டுள்ளார். புத்தளம் மத்திய நிலையத்தில் முன்பிள்ளைப் பருவ ஆசிரிய பயிற்சி நெறி மற்றும் அதிபர்களுக்கான 21ம் நூற்றாண்டு தலைமைத்துவ பயிற்சி நெறிகளை நெறிப்படுத்தி உள்ளார்.
தொழில் அற்ற பட்டதாரிகள் பயிற்சி நெறிகளையும் பட்டதாரிகளுக்கு முன்னெடுத்ததோடு, புத்தளம் வலய மட்ட ஆசிரியர்களுக்கான பாடரீதியானதும்,வாண்மை விருத்திக்குமான பயிற்சி நெறிகளுக்கும் தலைமை தாங்கினார். மேலும் ‘சகலருக்கும் ஆங்கில பாடநெறி’ என்ற திட்டத்தில் ஆசிரியர், அதிபர்கள், இடை விலகிய மாணவர்களுக்கான இணைப்பாளராக பணி புரிந்தார். மேலும் ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டல் பாடநெறிகளையும் வழங்கினார்.
இவரின் கல்வி நடவடிக்கைகளுடன் திட்டமிடல், கல்வி நிர்வாகம், கணக்குப் பகுதி, ஆசிரியர் தாபனப்பிரிவு போன்றவற்றிலும் தமது பங்களிப்பைச் செய்துள்ளார். அத்துடன் வலயக் கல்விப் பணிமனையில் விளையாட்டுப் போட்டி, பரீட்சை தவணைப் புள்ளிகள்(தமிழ்), இலவச புத்தக விநியோகம், இலவச சீருடை விநியோகம், தேசிய மட்ட பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் (ஆரம்பக் கல்வி)போன்ற பொறுப்புகளை வகித்தார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் தொலைக்கல்வி பாடநெறியில் (1991--1995) போதனாசிரியராகவும், 1995மே மாதம் தொடக்கம் சிரேஷ்ட போதனாசிரியராகவும், கடமையாற்றியவர். அத்துடன் மேலதிக மொழி விருத்தி பாடநெறி, தொடருறுக் கல்வி, திறந்த பாடசாலை 12 மத்திய நிலையங்களுக்கு சிரேஷ்ட போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். தமது வெளிநாட்டு பயிற்சி நெறியான தொலைக்கல்வியும்,சிறந்த கல்விக்குமான பாடநெறியை சுவீடன் நாட்டில் தங்குமிட வசதியுடன் கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் ஓய்வு நிலை கல்வி சமூகத்திற்கு பெரும் பாதிப்பாகும்.
No comments