Breaking News

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு.

இன்று நடைபெற்ற வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நாடறிந்த விடயம்.

ஆனால் யார் தங்களது தலைவரை சிறையில் அடைத்தார்களோ, அவர்களுக்கு ஆதரவாக மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.

அதுபோல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் இந்த வாக்கெடுப்பில் வரவுசெலவு திட்டத்தினை எதிர்த்து வாக்களித்த நிலையில், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த அரசியல் கொள்கையினை பார்கின்றபோது மிகவும் கவலையாக உள்ளது. உண்மையில் இவர்களது கொள்கைகள் என்ன ?

மக்களுக்கு நடிக்கின்றார்களா ? அல்லது தலைமைத்துவ கட்டுப்பாடு இல்லாதவர்களா ? இவர்களுக்கு கொள்கையென்பது சிறுதளவுமில்லையா ? அல்லது தலைமைத்துவம் சரியாக வழிநடத்தவில்லையா ?

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால செயல்பாடுகளை அவதானிக்கும்போது இவர்கள் ஒருபோதும் மக்களுக்காக செயல்படவில்லை என்பது புரிகின்றது.

ஆனால் சரியோ, பிழையோ எது செய்தாலும் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 

ஆனால் மக்களின் எண்ணங்களுக்கு மாற்றமாக செயல்படுவதானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இவர்களை வழிநடாத்த பலமான சக்தியில்லை என்பதனை காட்டுகின்றது.

இந்த அரசாங்கம் முஸ்லிம் ஜனாஸாக்களை தீயில் எரிக்கின்ற நிலையில், எந்தவொரு மனச்சாட்சியுள்ள முஸ்லிமும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டான்.

மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையானது இரண்டு பக்கமும் நடிக்கின்ற நிலைப்பாட்டை காண்பிக்கின்றது.

அத்துடன் ஜனாஸாக்களை எரிக்கின்ற அரசாங்கத்தை எதிர்த்து தங்களது எதிர்ப்பினை காண்பிக்க தவறியதுடன், பின்கதவினால் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகின்றார்கள் என்பது புரிகின்றது.

மொத்தத்தில் முஸ்லிம்களின் அரசியல் கொள்கையற்றதாக பயணிப்பதுடன், மாற்று சமூகத்தினர் ஏளனமாக சிரிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது





No comments

note