Breaking News

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முத்தையா முரளீதரனின் வரலாற்று திரைப்படமும் கொந்தளிக்கும் தமிழகமும்.

சர்வதேசரீதியில் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கட் அணியின் சுழல் பந்து வீச்சாளராக விளையாடி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான முத்தையா முரளீதரன் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கு அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே இந்த சர்ச்சைகள் வெடித்துள்ளன.

“800” என்ற தமிழ் திரைப்படத்தில் முரளீதரனின் பாத்திரத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பதற்காக 2019 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் படப்பிடிப்புக்கள் இன்னும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் “தமிழின துரோகியான முரளீதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கக்கூடாது” என்று விஜய் சேதுபதியின் ரசிகர்களும், 
ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்ற தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

அந்தவகையில் ம.தி.மு.கழகத்தின் வை கோ, இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் போன்றவர்களும் அதில் அடங்குவார்கள்.

சாதனைத் தமிழரான முரளீதரன் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்ன ?

முரளீதரன் சர்வதேசரீதியில் தமிழர்களின் பெருமையை பிரதிபலித்திருந்தாலும், அவர் ஒரு தமிழின துரோகியாக பார்க்கப்படுகின்றார். இதற்கு இவரது அறிக்கைகளும் நடவடிக்கைகளுமே பிரதான காரணமாகும்.

“முதலில் நான் இலங்கையன், அதன்பிறகுதான் நான் ஒரு தமிழன்” என்று முரளீதரன் அடிக்கடி கூறுவார். இது தமிழர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணி வருகின்றது.

இறுதி யுத்தத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும்போது இராணுவம் தங்களது ஆடைகளில் அணிந்திருந்த இலங்கையின் தேசியக் கொடியைத்தான் முரளீதரனும் தனது ஆடையில் அணிந்திருக்கின்றார் அதனால் இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களது வாதமாகும்.

அத்துடன் தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் உற்பட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு தமிழர்களின் விடுதலை போராட்டம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டினை எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் என்றும் முரளீதரன் பல இடங்களில் பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.

அதாவது தேச விடுதலைக்கான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முரளீதரனுக்கும் கருணா அம்மானுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று உலக தமிழர் அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன.

மேலும் கடந்த பொது தேர்தலில் முரளீதரனின் சகோதரர் தமிழ் தேசியத்துக்கு எதிரான அணியில் போட்டியிட்டு தொல்விடைந்தார். இந்த தேர்தலில் தமிழ் உணர்வாளர்களை தோல்வியடையச் செய்வதற்காக முரளீதரன் நாடு முழுவதிலும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான ஜூலை கலவரத்தில் முரளீதரனும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டதாக இந்த படத்தின் கதையில் உள்ளது. இதனால் முரளீதரன் ஒரு ஈழப்போராட்டத்தின் வலிகளை சுமந்த ஒருவர் என்றும் சித்தரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தினை அவரது மனைவி தயாரிக்கின்ற காரணத்தினால் முரளீதரனின் பலயீனங்கள் எதுவும் இதில் இடம்பெறாது என்றும், முழுக்க முழுக்க இது முரளீதரனை புகழ்பாடும் படமாகவே அமையும் என்றும் கூறப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் தமிழினத்துக்கு பெருமை தேடிக்கொடுத்த சாதனையாளரான முத்தையா முரளீதரன் அவர்கள் தன்னை ஓர் உணர்வுள்ள தமிழனாக காண்பித்திருந்தால், இன்று அவரது வாழ்வு திரைப்படமாக எடுக்கப்படுகின்ற நிலைக்கு வந்திருக்காது. அதாவது கிரிக்கட் அணியில் அவருக்கு இடம் கிடைத்திருக்காது என்பது மட்டும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments

note