கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்யவேண்டும்- அலிசாஹிர் மௌலானா வேண்டுகோள்!
கோத்தபாய ராஜபக்சவையும்,பிரதமர் மகிந்த ராஜபக்சவையும், எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவையும் சுகாதார அமைச்சரையும் நீதியமைச்சரையும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும் எமது அரசமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது
இன்று கொரோனாவைரசினால் உயிரிழந்த முஸ்லீம் பிரஜையும் சில நாட்களிற்கு முன்னர் உயிரிழந்த இரு முஸ்லீம்களும் தகனம் செய்யப்பட்டது மனச்சோர்வையளிக்கின்றது.
கொரோனா வைரசினை எப்பாடுபட்டாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் முஸ்லீம் சமூகத்தினர் அதற்கான முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
நாங்கள் கேட்பதெல்லாம் சர்வதேச நியமங்கள் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கண்ணியமான அடக்கத்தை வழங்குங்கள் என்பதே.
இவையனைத்தையும் கருத்தில்கொள்ளும்போது ஏன் இலங்கையின் சுகாதார விதிமுறைகள் விதிவிலக்காக காணப்படுகின்றன?
சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தில் ஒத்துழைப்பை வழங்காததன் காரணமாக கடந்த மே மாதம் நானும் வேறு பலரும்; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தோம்.
நவம்பர் 26 ம் திகதி இது தொடபான நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவையும்,பிரதமர் மகிந்த ராஜபக்சவையும், எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவையும் சுகாதார அமைச்சரையும் நீதியமைச்சரையும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும் எமது அரசமைப்பி;ல்உறுதிசெய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மதிக்குமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக கொரோனா வைரசினால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை புதைப்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ள நிலையில்.
இதேவேளை 20வது திருத்தத்தி;ற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வியொன்றை எழுப்ப விரும்புகின்றேன்
நீங்கள் உங்கள் நடவடிக்கை முஸ்லீம் சமூகத்தின் சிறந்த நலன்களை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது என தெரிவித்தீர்கள்.
அரசாங்கத்துடன் உடன்பாட்டிற்கு வரும் செயற்பாடுகளின் போது,நீங்கள் உண்மையிலேயே சமூகத்தின் நலன்களை மனதில் வைத்து செயற்பட்டிருந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தை நீங்கள் ஏன் அரசாங்க தரப்பிடம் முன்வைக்கவில்லை.
எனினும் உங்கள் குறுகிய நலன்களை புறந்தள்ளிட்டு இந்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறும் எங்களை கைவிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நன்றி - தினக்குரல்
No comments