Breaking News

சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினருக்கு இருக்கின்ற முதுகெலும்பும், ஆண்மையும் உரிமைக்கோசம் முழங்குபவர்களிடம் இல்லையா ?

மாடறுப்பதனை தடைசெய்யும் யோசனையை பிரதமர் அவர்கள் முன்வைத்ததானது நாட்டில் பலதரப்பிலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த யோசனை அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றபின்பு சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர் மிக அழுத்தமாக கூறியுள்ளார்கள்.

பொதுமக்களாகிய நாங்கள் எதை சாப்பிட வேண்டுமென்று நாங்களே தீர்மானிக்கவேண்டுமே தவிர அதனை அரசாங்கம் தடுக்க முடியாது என்றும், அவ்வாறு இறைச்சிக்காக மாடறுப்பது தடைசெய்யப்பட்டால் முஸ்லிம்கள் மாத்திரமல்ல ஏனைய சமூகத்தினர்களும் தொழில்களை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினருடன் என்னதான் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், பள்ளிவாசளுடன் மட்டும் முடங்கிவிடாமல், சமூகத்துக்கு எதிரான அரசியல் பிரச்சினைகள் வருகின்றபோது முதலில் குரல் கொடுப்பது மட்டுமல்லாது முன்னின்று களத்தில் இறங்கி செயல்படுகின்ற இவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.

முஸ்லிம்களின் உரிமைகளை பெறப்போவதாகவும், அபிவிருத்தி செய்யப்போவதாகவும் ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் வீர முழக்கம் பேசி வாக்குப்பிச்சை எடுக்கின்ற எமது அன்புக்குரிய அரசியல்வாதிகள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது வழமை.

அரசியல்வாதிகளுக்கு இருப்பதைபோன்று தங்களை சுற்றிவர எந்தவித பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இல்லாத நிலையில், சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர் துணிந்துநின்று அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பதானது அவர்களது பலமான ஈமானின் உறுதியை காண்பிக்கின்றது.

எமது சமூகத்தில் எத்தனையோ ஜமாஅத்தினர்களும், உலமாக்களும், கல்வி சார்ந்தோரும், சங்கங்களும், அமைப்புக்களும் இந்நாட்டில் உள்ளது. இவர்களும் சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர் போன்று சமூகப் பிரச்சினைகள் வருகின்றபோது மூலைக்குள் முடங்கிவிடாமல் வீதிக்கு வரவேண்டும்.

எனவே கடந்தகால வரலாற்றில் மக்களின் வாக்குகள் மூலம் அரசியல் அதிகாரங்களைப் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளினால் முடியாததை துணிவுடன் களமிறங்கி அநீதிக்கெதிராக குரல்கொடுத்த சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினரின் செயல்பாடுகளுக்கு கொள்கை முரண்பாடுகளுக்கப்பால் ஆதவளிப்பதுடன், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது எமது சமூகத்தின் குரலை பலமடையச்செய்யும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments