அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குங்கள் –இம்ரான் பா.உ.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.செவ்வாய்கிழமை காலை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்ப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மேடைகளில் ஏறி தேங்காய் விலை எப்படி “தென் செபத” என்று கேட்டவர்களை நாம் “தென் செபத” என கேட்கும் காலம் உருவாகியுள்ளது. அன்று எமது அரசாங்கம் தேங்காய்க்கு நிர்ணய விலை நிர்ணயித்த பொழுது அதை விமர்சித்தவர்களே இன்று தேங்காயின் அளவுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்துள்ளார்கள். இதனால் இப்பொழுது நாம் தேங்காய் வாங்க செல்லும்பொழுது டேப் உடன்தான் கடைக்கு செல்ல வேண்டும்.
தேங்காய் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயித்ததை நாம் கிண்டல் செய்யவில்லை. இந்த அரசின் அமைச்சர் பந்துல குணவர்த்தனவே கிண்டல் செய்கிறார். இந்த கானொளியில் தேங்காயின் விலை நிர்ணயம் தொடர்பாக அவர் எமது ஆட்சி காலத்தில் தெரிவித்த கருத்து உள்ளது .
தேங்காயின் அளவை பொறுத்து விலை நிர்ணயிப்பது முட்டாள்தனம் ஆகவே மக்கள் வாழக்கூடிய ஆட்சி மலர ஆட்சி மாற்றம் அவசியம் என அவரே கூறுகிறார். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவுடன் வாழ்கையை கொண்டுசெல்ல முடியும் என கூறியவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
இப்பொழுது சந்தைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினதும் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அரசின் பொருத்தமற்ற பொருளாதார கொள்கைகளால் இந்த விலை அதிகரிப்பை கட்டுபடுத்த முடியாது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜனாதிபதி அரிசி கடைக்கு நேரடியாக சென்றதால் அரிசி விலை குறையவில்லை. தேசிய வைத்தியசாலைக்கு சென்றதால் அங்குள்ள குறைபாடுகள் தீர்ந்து தனியார் வைத்தியசாலை போன்று அது மாறவில்லை. இவை அனைத்தும் அரசின் குறைபாடுகளை மறைத்து மக்களின் கவனத்தை திருப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் நாடகங்களே என தெரிவித்தார்.
No comments