Breaking News

அரச சேவையிலிருந்து விடை பெற்றார் ஆசிரியர் அப்துல் ரஷீத் மௌலவி

(ஏ.சீ.எம்.ஹக்மான் ஆசிரியர்)

அரச சேவையில் இருந்து விடைபெற்றார் எனது மதிப்பிற்குரிய ஆசான் - எம்.பி. அப்துல் ரஷீத் மௌலவி அவர்கள் 

புத்தளம் மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்ட பூலாச்சேனையைச் சேர்ந்த எம்.பி. அப்துல் ரஷீத் மௌலவி அவர்கள் தனது 27 வருடகால அரச பாடசலை ஆசிரியப் பணியை முடிவுக்கு கொண்டு வந்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 18 வருட சேவைக்குப் பிறகு திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உதவி அதிபராக 9 வருடங்கள் சேவையாற்றி அங்கிருந்து 2020.08.08 முதல் ஓய்வாகின்றார்.

இவர் இளமைக் காலத்தில் இருந்து இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு இஸ்லாமிய பற்றாளர். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடுவது மட்டுமல்ல அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த மனிதர்.

நான் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது இவர் 1993 ஐனவரி 4 ஆம் திகதி தனது அரச பாடசாலை ஆசிரிய நியமனத்தைப் பெற்று நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார்.
அப்பாடசாலையில் 2011 ஆம் ஆண்டுவரை 18 வருடங்கள் அப்பாடசாலைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். அக்காலப்பகுதிக்குள் அதாவது 2002 ஆம் ஆண்டு நான் அப்பாடசாலையில்  ஆசிரியராக இணைந்தேன் இதன் மூலம் அவரின் மாணவனாகவும் சக ஆசிரியராகவும் செயற்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அவர் ஓய்வுபெறும் வரை அவரோடு  இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் அவரிடமிருந்து ஆசிரியப் பணியின் முன்மாதிரிகளை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இவரது 18 வருடகால சேவையில் இப்பாடசாலை வளம் கண்டிருக்கின்றது. மாணவர்களின் ஒழுக்க விடயங்கள் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் என்பவற்றை போதித்து அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளார். கட்டுக் கோப்பான இஸ்லாமிய மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என இப்பாடசாலைக்குள் அயராது உழைத்தவர். அத்துடன் இப்பாடசாலையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆண்டுவரை 3 வருடங்கள் அதிபராக கடமையாற்றி சிறந்த தலைமத்துவத்தை வழங்கி பாடசாலையை சிறப்பாக வழிநடாத்திய ஒரு ஆளுமை மிக்க நிர்வாகி என்பதை நிரூபித்துச் சென்றார்.

இவர் ஆலங்குடா கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது பூலாச்சேனைக் கிராமத்தில் வசித்து வந்தாலும் அதிகமாக நுரைசோலையில் நன்கு அறியப்பட்டவர். ஏனென்றால் நுரைச்சோலை ஜும்ஆ பள்ளியில் 8 வருடங்கள் (1988-1996) பேஷ் இமாமாக பணி செய்துள்ளார். ஆக தனது ஆயுளில் அதிக காலங்கள் நுரைச்சோலைக்காக பணி செய்துள்ளார். நுரைச்சோலை மக்கள் எப்போதும் இவருக்கு நன்றியுடையோராக இருப்போம். இவருக்காக பிரார்த்னை புரிவோம். 

இவரது வரலாற்றை நோக்கினால், இவர் தனது ஆரம்பக் கல்வியை தரம் 1-5 ஆலங்குடா மு.வித்தியாலயத்திலும் தரம் 6-7 நரக்களி தமிழ் வித்தியாலயத்திலும் கற்று பின்னர் இஸ்லாமிய மார்க்கக் கல்வியை கற்பதற்காக புத்தளம் காசிமிய்யா அரபுக் கலாசாலையிலே நுழைந்து ஒரு சிறந்த மார்க்க அறிஞராக, ஆலிமாக 1981 ஆம் ஆண்டு வெளியேருகிறார். தான் கற்ற கலாசாலையே இவரின் திறமையை முதலில் பயண்படுத்திக் கொண்டது. ஆலிமாக வெளியேறியவுடனே இவரை உஸ்தாதாக (ஆசிரியராக) நியமித்தது. 5 வருடங்கள் அங்கே ஆசிரியப் பணியை செய்து தன்னை ஆசிரியப் பணிக்காகவும் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் செதுக்கிக் கெண்டார்.

இவர் அரச சேவையில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுகின்றார். ஆனால் சமூகத்திற்கான இவரது பணி தொடர வேண்டும். இவர் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை பிரதான இடம் வகிக்கின்றது.இவர் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை கல்பிட்டி பிராந்திய தலைவராக 2002 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டிருக்கிறார். அத்துடன் அ.இ.ஜ.உ.ச. புத்தளம் மாவட்ட செயலாளராக 2013 லிருந்து தற்போது வரையும் சமூகப்பணி செய்து வருகிறார்.

“யா அல்லாஹ்! இவரது 27 வருட ஆசிரிய சேவையை பொருந்திக் கொள்வாயாக, அரச சேவை ஓய்வுக்குப் பின்னரான இவரது சமூகப்பணி மற்றும் எஞ்சிய இவரது வாழ்க்கை சிறப்பாக அமைய  உதவி செய்திடுவாயாக..”

ACM. ஹக்மான்
நுரைச்சோலை




No comments