திருந்துவோம் திருத்துவோம் - அஷ்ஷேய்க் ஷாபி ஸஃதி
மனிதன் தனது தீய செயலில் நிலைத்திருக்காமல் திருந்தி திருமறை வழியில் நடந்து பிறரையும் திருத்தி திருப்தியான வழியில் வழிகாட்டி செயல் படுமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا
*_யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்_*.
(அல்குர்ஆன் : 4:146)
மனிதன் திருந்தி சீர் பெறும் போது தூய வாழ்வோடு பயணிக்கும் சிறந்த அந்தஸ்த்தை அடைந்து கொள்கிறான் என்பதை இந்த வசனம் வழியுறுத்துகின்றது.
ஆனால் மனிதன் தன்னை மறந்து தீமைகளில் மூழ்கி பிறரின் குறைகளை தேடித் தேடி மற்றவர்களிடம் பரப்பி குறை கூறும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்கிறான்.
இவ்வாறான செயல்களால் நிறைய மனிதர்களின் உள்ளங்கள் நோகடிக்கப் படுகின்றது.
தனிமனித விடயங்களிலும், சமூகம் சார்ந்த விடயங்களிலும் பிறர் பற்றிய தப்பான கருத்துக்களை பதிவு செய்து சில பொழுது சந்தோஷப்படுபவர்களும் உண்டு.
இவ்வாரானவர்களுக்கு அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கின்றான்.
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
_*எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்*_.
(அல்குர்ஆன் : 24:19)
எனவே தற்கால சூழலில் அரசியல் களத்தில் குதித்துள்ள வேட்பாளர்களும்,வாக்காளர்களும் மிகக் கவனமாக தங்களுடைய வார்த்தை பிரயோகங்களை ஆக்கிக் கொள்வது காலத்தின் தேவைப்பாடாகும்.
பிறரை மான பங்க படுத்தி மக்கள் மன்றத்தில் வாயில் வந்ததை எல்லாம் பேசும் பழக்கத்தை முற்றாகத் தவிர்த்து தான் செய்யும் சேவைகளையும்,எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை வைத்துக் கொள்வது மிகச் சிறப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்.
அவ்வாறே தன்னைத் திருத்தி பிறரையும் திருத்தும் பணியில் ஈடு பட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற்று சுவனம் நுழையும் அந்தஸ்த்தை அடைந்து கொள்வோமாக!
✍️ ஷாபி ஸஃதி
2020/6/30
No comments