அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
கொரோனா தொற்றால் மரணம் அடைந்த ஒரு முஸ்லிமின் பிரேததத்தை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தகனம் செய்ததை தொடர்ந்து எழுந்திருக்கும் சர்ச்சை இனவாதமாகிவிடக்கூடாது என்ற வகையில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அதனை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை மற்றும் வைத்தியத்துறை சார்ந்தவர்கள் அது தொடர்பில் கலந்துரையாடி சிறந்த முடிவொன்றுக்கு வர முடியும். அவ்வாறு இல்லாவிட்டாலும் குறித்த பிரச்சினையை அரசியலாக்கியோ அல்லது இனவாதமாக்கியோ மேலும் சர்ச்சைகளை வளர்த்துக்கொள்ளாத ஒரு சூழலையே முஸ்லிம் தரப்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் பேண விரும்புகிறார்கள்.
இந்நிலையில் சர்ச்சையை தீர்த்துக்கொள்ளும் பொறுப்பை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விட்டு விட்டு முஸ்லிம் அல்லாதவர்களின் ஒரு கேள்வி தொடர்பில் கவனம் செலுத்தலாம் என விரும்புகிறேன்.
ஒரு பிரேதத்தை அடக்கம் செய்தாலென்ன? தகனம் செய்தாலென்ன? இறந்த பிறகு இதில் என்ன சர்ச்சை வேண்டிக்கிடக்கிறது? முஸ்லிம்கள் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்கள்? என்று சகோதர சமூகத்தை சேர்ந்தவர்கள் வினா எழுப்புகிறார்கள்.
இந்த வினாவுக்கான பதிலை இஸ்லாமிய சட்டத்துறையாளர்கள் வழங்கியிருக்கிறார்கள். சட்டத்துறை சார்ந்த பதிலோடு தத்துவம் சார்ந்த ஒரு பதிலையும் இங்கு பதிவு செய்வதே எனது நோக்கமாகும்.
மரணத்தின் போது மனிதனது உயிர் (ஆன்மா) பிரிந்து செல்கிறது. அதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அது அதன் படைப்பாளனை நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறது. ஆன்மா கைப்பற்றப்பட்ட பின்பு உடல் எஞ்சுகின்றது. அந்த உடலை குளிப்பாட்டி இறுதி ஆடை(கபன்) அணிவித்து மரணித்த ஆன்மாவுக்காக (தொழுகை நடாத்தி) பிரார்த்தித்து நல்லடக்கம் செய்வதன் மூலம் குறித்த உடலை அதன் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனை மண்ணுக்கே ஒப்படைப்பதன் மூலம் அது நிறைவேறுகின்றது என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் முஸ்லிம்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய விரும்புகிறார்கள்.
அது மட்டுமல்ல, மனிதன் கண்ணியமானவன்; அவன் வாழ்விலும் சாவிலும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. யுத்த களமொன்றில் சிதைக்கப்பட்டிருந்த எதிரியின் உடலொன்றை பார்த்து விட்டு 'இறந்தவர்களது உடல்களை சிதைக்காதீர்கள்' என மாநபி அவர்கள் கடுமையாக எச்சரித்தமைக்கு காரணம் சாவுக்குப் பின்னாலும் மனிதன் (யாராக இருப்பினும் சரி கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதே.
இன்னும் சொன்னால் இறந்த ஒரு மனிதனின் உடலை சுத்தம் செய்யும் போது கூட கடுமையாக அதனை கையாள்வதை இஸ்லாம் தடை செய்திருக்கறது. அது மட்டுமல்ல உடல் கெடுவதற்கு முன்னால் மிக அவசரமாக அந்த உடலை அடக்கம் செய்து விட வேண்டும் என்பதையும் இஸ்லாம் வழியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்தும் இறப்பின் பிறகு மனிதனுக்கு கொடுக்கப்படும் கண்ணியங்களே.
ஒரு யூதனுடைய பிரேதம் எடுத்துச்செல்லப்பட்ட போது மாநபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அந்த பிரேதத்திற்கு மரியாதை செய்தார்கள் என்பதையும் உடலுக்கான மரியாதை தொடர்பில் சுட்டிக்காட்டலாம்.
மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற பூமிக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் கூறி அவர்களது விமோசனத்திற்காக பிரார்த்தனை புரியுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதும் இறந்தவர்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கே. தகனம் செய்யும் போது இத்தகைய கண்ணியங்களுக்கு இடமில்லாமல் போகின்றது. அது மட்டுமல்ல, மனிதனின் உடலை அதன் சொந்தக்காரனாகிய இறைவனிடம் ஒப்படைக்க முடியாமல் போகிறது போன்ற உணர்வுகளை முஸ்லிம்கள் இஸ்லாத்தின் போதனைகளிலிருந்து பெற்றிருப்பதே பூதவுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுவதறகான காரணமாகும்.
இதனை விளங்கிய நிலையில் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க முடியும் என்பதே முஸ்லிம்களது எதிர்பார்ப்பாகும். இனவாதம் இங்கு அவசியமில்லை.
2020 April 07
No comments