Breaking News

ஜனாஸா விவகாரத்தில் குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம் அவர்களை எமது சமூகத்தில் சிலர் விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது- ஹிதாயத் சத்தார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் எரிக்கக் கூடாது என்ற விடயத்தில் குரல்கொடுத்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் அவர்களை பெரும்பான்மையினர் தூற்றுவதினை விட நம்மவர்களே உண்மை புரியாமல் யதார்த்தம் அறியாமல் ஏசுவதும், தூற்றுவதும் போதாக் குறைக்கு பெரும்பான்மை மக்களிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக்கில் சிங்களத்தில் கிண்டல் செய்வதும் வீடியோ பதிவுகள் போடுகின்றமை கவலைக்குறிய் விடயமாகும்.

ஜனாஸாக்களை அடக்க முடியும். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படாது என்று வழங்கப்பட்ட உறுதிமொழி பின்னர் மீறப்பட்டவுடன் தனது எதிர்கால அரசியல் நிலைமைகளை கூட கவனத்தில் கொள்ளாமல் தான் ஏற்றுக் கொண்டுள்ள மார்க்க கடமைக்காக போராடிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, ரிஷாத் பதியுத்தீன், அலி ஸாஹிர் மௌலானா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இந்த சமூகத்திற்காக இஸ்லாமிய கடமையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்த முயற்சியை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், சமூக வலைதளங்களில் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களின் செயல்பாட்டை பாராட்ட வேண்டாம். விபரமில்லாமல் அவர்களை திட்டித் தீர்க்காமலாவது இருக்கலாமே.

முஸ்லிம் அரசியல் தலைவர்களை திட்டி விட்டோம். ஒரு போஸ்ட் போட்டு விட்டோம். வட்ஸ் அப்பில் ஓடியோ போட்டு விட்டோம். அல்லது பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டு விட்டோம் என்று சந்தோசப்படும் சகோதரர்களே ,

நீங்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை திட்டுகின்றோம் என்ற பெயரில் போடும் ஒவ்வொரு லைவ் வீடியோவும் ஒவ்வொரு ஓடியோக்களும் இந்த சமூகத்தின் மீதான இனவாத பார்வையை தான் மாற்று சமூகத்தில் உண்டாக்குமே தவிர நலவை பெற்றுத்தராது.

நாம் கடந்து வந்த காலங்களை விட கடக்கப் போகும் காலம் ஆபத்தானதாக இருக்கலாம். உரிமைகளுக்கு பல சவால்கள் வரலாம் நமக்கெதிராக குரல் கொடுக்க, உரிமைக்காக போராட ஆட்கள் இல்லா விட்டாலும் குறைந்த பட்சம் பரிந்து பேசவாவது நமக்கு ஆட்கள் தேவையல்லவா?

இந்த நேரத்தில் குறித்த சகோதர்கள் நமக்காக நாம் முஸ்லிம்கள் என்று ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். முடிந்தவரை முயற்சிக்கின்றார்கள். அவர்களை தட்டி வீழ்த்தாமல் தட்டிக் கொடுப்பது நம் கடமையல்லவா?

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே இல்லாம் போய் விடும். தேர்தல் காலங்களில் வெவ்வேறாக அரசியல் செய்வோம் அரசியல் வாதிகளாக. மற்ற காலங்களில் சமூகப் பணி செய்வோம் முஸ்லிம்களாக ..

ஹிதாயத் சத்தார்
முன்னாள் மத்திய மாகாண 
சபை உறுப்பினர். 



No comments

note