Breaking News

நோயையும் விரட்டுவோம் பேயையும் விரட்டுவோம் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

"ஒரு கொரோனா தொற்றாளர் சுதந்திரமாக பத்து நாட்கள் மக்கள் மத்தியில் நடமாடினால் சுமார் 300 பேரை கொரோனா துரத்திப் பிடிக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று வைரஸ்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு வைத்திய நிபுணர் கூறுகின்றார். 

அந்த 300 பேரில் பலர் அவர்களது உடம்பிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி காரணமாகவே குணமாகி விடுவார்கள். மற்றும் சிலர் நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட நிலையில் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தப்பி விடுவார்கள், இன்னும் சிலர் சிகிச்சைகள் மூலம் குணமடைந்து விடுவார்கள். ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வயது முதிர்ந்தவர்கள் பலவீனமானவர்கள் ஆபத்தான கட்டத்திற்கு சென்று விடுவார்கள். மரணம் சம்பவிப்பதற்கான சாத்தியம் அத்தகையவர்களுக்கு மத்தியிலேயே அதிகமானதாக இருக்கும். 

என்றாலும் ஏற்கனவே தொற்றுக்கு இலக்காகிய 300 பேர்களும் கொரோனா தொற்றை இன்னும் பலநூறு பேருக்கு பரிசளிக்காமல் ஓய மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நடமாடுகின்ற காலம் சந்திக்கும் மனிதர்கள் என்பவற்றைப் பொருத்து கொரோனா மனிதர்களை துரத்திப் பிடிக்கும்; அளவு கூடிக் குறையலாம். 

வாயைத்திறந்தால் (பேசினால்) தும்மினால்... இருமினால்.. ஒரு மீட்டர் இடைவெளிக்குள் நெறுக்கமாக நின்றால்... தொட்டால்... (மனிதர்களை தொட்டாலும் சரி பொருட்களை தொட்டாலும் சரி நோய்த்தொற்றுக்கு இலக்கானவர் தொட்ட இடத்தை பிரிதொருவர் தொட்டாலும் சரி நோயாளி பயன்படுத்திய பாத்திரத்தை பிரிதொருவர் பயன்படுத்தினாலும் சரி) முகக்கவசம் மற்றும் ஆடைகள் கையுறைகள் போன்றவற்றை கழற்றிவைத்தால்... தொற்றுக்கு இலக்காகியவருடன் வாகனத்தில் அல்லது மோட்டார் சைக்கிளில் பயணித்தால்...

இது போன்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவரை தாவிப்பிடித்து விடும். பின்னர் அவர் குணமடையலாம் அல்லது ஆபத்தான கட்டத்திற்கு செல்லலாம் எனினும் கொரோனா பரவிக்கொண்டே செல்லும். 

இவ்வாறு கொரோனா எங்களை துரத்திப்பிடிக்க முயற்சிக்கும் போது நாம் ஓடிக்கொண்டிருக்க முடியாது. மாறாக நாங்கள் தான் கொரோனாவை துரத்த வேண்டும். அதனைத்தான் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சுகாதாரத்துரை வைத்தியத்துறை நிபுணர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அறிவுறுத்தல்களின் படி கொரோனாவை துரத்துவதை விட எளிதான இலேசான வேலை உலகில் வேறொன்று இருக்க முடியாது எனலாம். மற்றொரு வார்த்தையில் சொன்னால் உலகில் நம்பர் வன் சோம்பேறியினால் தான் கொரோனாவை வெற்றிகரமாக துரத்த முடியும். அதாவது வீட்டை பூட்டிக்கொண்டு நாள் முழுவதும் தூங்குபவனிடம் கொரோனா தோற்றுப்போய்விடும் அவனைத் துரத்திப்பிடிக்க கொரோனாவால் முடியாது. 

நீங்கள் அந்தளவு சோம்பேறியாக வேண்டியதில்லை வீட்டை திறந்து வையுங்கள் கேட்டை பூட்டிவையுங்கள் வெளியே செல்லாதீர்கள் அலைச்சல் மாய்ச்சல் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள் வாய்திறக்காதீர்கள் பேசினால் நல்லதை மெல்லியதாக பேசுங்கள் தும்மினால் பீரங்கி போல் வெடிக்காதீர்கள் சைலன்ஸர் போட்டு தும்முங்கள் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ளுங்கள் யாராவது கதைக்க வந்தால் தூரத்திலிருந்து பேசி நான்கு வார்த்தைகளோடு அனுப்பிவைத்து விடுங்கள் அதிகம் பேச வேண்டுமென்றால் போனில் கதைக்குமாறு கூறுங்கள் போக்குவரத்துகளை காலவரையறை இன்றி ஒத்திப்போடுங்கள் சொந்தங்களின் சுக துக்கங்களை வட்ஸப்பில் விசாரித்துக்கொள்ளுங்கள் வீட்டிலிருக்கும் ஒரு ஜாம்பவானை அனுப்பி அரசாங்கம் அனுமதி தரும் நேரங்களில் காய் கறிகளை வாங்கிக்கொள்ளுங்கள் (குகை வாசிகள் தூங்கி எழுந்த பின் கவனமாகச் சென்று உணவை வாங்கி வருமாறு ஒருவரை அனுப்பியது போல.) உணவு உட்கொண்ட பின் வேலைகள் இல்லாது போனால் நன்றாக தூங்குங்கள்.

மொத்தத்தில் சுத்த சோம்பேறிகளாகி விடுங்கள். கொரோனாவைத் துரத்தி வெற்றிகண்ட வீர வீராங்கனைகள் வரிசையில் நிச்சயம் நீங்கள் முதலிடம் பெறுவீர்கள்.

எங்களால் சோம்பேறிகளாக இருக்க முடியாது என்று உற்சாக மிகுதியில் செயல்பட்ட எண்ணாயிரத்திற்கும் அதிகமானோர் தற்போது பொலிஸாரின் கஸ்டடியில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வாறு உற்சாக மிகுதியில் செயல்பட்டவர்களால் தான் நாட்டிலிருக்கும் பல கிராமங்கள் இன்று லொக் டவ்ன் ஆகி மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா அவர்களால் வெற்றிவாகை சூடிக்கொண்டே இருக்கிறது. 

எனவே தற்போதைக்கு தயவு செய்து சோம்பேறிகளாகி விடுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் காரணம் கொரோனா நோயை அப்போது தான் வெற்றிகரமாக துரத்தியடிக்க முடியும்.

என்றாலும் கொரோனா பேய் (கொரோனா பயம்) இருக்கிறதே, அதனைத் துரத்தியடிப்பதற்கு மேற்கூறப்பட்ட சோம்பேறித்தனம் மட்டும் போதாது. மாறாக அதனோடிணைந்த ஓர் உற்சாகமும் தேவைப்படுகிறது.

அதாவது உடம்பால் சோம்பேறிகளாகவும் உள்ளத்தால் உற்சாகம் பெற்றவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அப்போது நோயையும் விரட்டலாம் பேயையும் விரட்டலாம். 

#கொரோனா_பேய்_(பயம்)
#என்றால்_என்ன?

கொரோனா வந்திருக்கிறது. அது தொற்றிவிட்டால் அல்லது தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு விட்டால் கண்டறியப்பட்டவரை எங்களிடமிருந்து பிரித்து விடுவார்கள். அவரை அதன் பிறகு பார்க்க முடியாது போகலாம். அது சில வேளை இறுதிப் பிரிவாகவும் இருக்கலாம். சமூகத்திலிருந்து எங்களையும் தனிமைப்படுத்தி விடுவார்கள். மக்கள் எங்களை வேண்டாதவர்களாக பார்ப்பார்கள். தலைகுனிவுடனும் குற்ற உணர்வுடனுமே இனி நாம் வாழ வேண்டி இருக்கும். மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாக கருதுவார்கள். இந்த அவலத்தை எப்படி சகித்துக்கொள்வது?

என்ற இந்தப்பயம் தான் கொரோனாப் பேய். இந்தப் பயம் கொரோனாவை ஒன்றும் செய்து விடாது. கொரோனா மேலும் பரவுவதற்கே இந்தப்பயம் உதவுகின்றது. கொரோனா தொற்றுக்கான சாத்தியப்பாடு இருக்கக்கூடிய ஒருவர் இந்தப் பயத்தினால் அதனை மறைக்கவே முற்படுவார். உதாரணமாக வெளிநாடு சென்று வந்த ஒருவர் அதனை மறைக்க முயல்வார். 14 நாட்கள் அடைத்து விடுவார்கள் என்று பயப்படுவார். தடிமலோ இருமலோ ஏற்பட்ட ஒருவர் அதுபற்றி உரியவர்களிடம் ஆலோசனை பெற விரும்ப மாட்டார். 

கொரோனா பேய் எங்களை இவ்வாறு துரத்துமானால் எங்களது காதில் பூச்சுற்றி விட்டு தனது வேலையை கச்சிதமாக அது செய்துவிடும். நோய் உச்சகட்டத்திற்கு வந்த பின்னர் வேறு ஏதாவது வருத்தங்களைக் கூறியே தொற்றாளர் மருந்தெடுக்கச் செல்வார். அவருக்கு மருத்துவம் செய்த வைத்தியர்கள் தாதிமார்கள் அனைவரும் இறுதியில் சிரமத்துக்குள்ளாவார்கள். சமூகத்தின் நற்பெயருக்கும் குறிப்பாக இன்றைய சூழலில் அது பாதிப்பபை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இத்தனை விளைவுகள் நோயால் வந்தவைகளல்ல மாறாக பேயால் (பயத்தால்) வந்த விளைவுகளாகும். எனவே இந்தப் பேயை விரட்டுவதும் இன்றியமையாத ஒன்றாக ஆகி விடுகிறது,

உண்மைகள் எதுவானாலும் அல்லது நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் உரியவர்களிடம் அவற்றை தைரியமாக எடுத்துக்கூறி ஆலோசனை பெற வேண்டும். அதனால் வருகின்ற சிரமங்களையும் மனக்கஷ்டங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். இதுதான் அந்நதப்பேயை விரட்டுவதற்கான வழியாகும். 

இது வெறும் துணிவும் தைரியமும் மட்டுமல்ல மாறாக தியாகமாகவும் அர்ப்பணமாகவும் அது விளங்குகின்றது. இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் ஒரு வைத்திய நிபுணரின் கூற்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 'நோய்த்தொற்றுக்கு இலக்காகிய ஒருவர் 10 நாட்கள் சுதந்திரமாக நடமாடித் திரிந்தால் சுமார் 300 பேருக்கு அவரால் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது' என்ற அவரின் கூற்றின்படி அந்த 300 பேரையும் பாதிப்புக்குள்ளாக்காமல் பாதுகாப்பதற்காக நான் என்னை அர்ப்பணிக்கிறேன் என்று தொற்றுக்கு இலக்காகிய ஒருவர்... அல்லது தொற்றின் அறிகுறிகளை அவதானித்த ஒருவர் அல்லது தொற்றுக்கான சாத்தியப்பாடுகளைக் கொண்ட ஒருவர் தீர்மானிப்பது ஒரு தியாகமில்லையா?

இந்தத் தியாகம் மரணத்தில் சென்று முடிவடைவதாக வைத்துக்கொள்வோம். மரணம் என்றாவது ஒருநாள் வரத்தான் போகிறது. அது அல்லாஹ்வின் எழுத்துப்பிரகாரம் உரிய நேரத்தில் வந்தே தீரும். அந்நேரத்தில் மேற்கூறப்பட்ட மனநிலையோடு குறித்த தியாகத்தை ஒருவர் செய்திருந்தால் சுவர்க்கத்தை அடைவதற்கு அது போதுமானதாக இருக்குமல்லவா! பலநூறு உயிர்களை ஆபத்திலிருந்து காப்பதற்காக செய்யப்பட்ட தியாகம் அது. 

இத்தகைய தியாகத்தை கொரோனா பேய்க்கு (பயத்திற்கு) அஞ்சாமல் செய்துகொண்டிருக்கும் மற்றுமொரு சாரார் தான் வைத்தியர்கள். மரணத்தின் விளிம்பில் இருந்துகொண்டு மனித சமூகத்தின் பாதுகாப்பிற்காக அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 

நிவ் யோக் நகரில் கொமெல்லா கிரிக் என்ற பெண் வைத்தியரொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார். அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் டுவிட்டரில் தனது பிள்ளைகளுக்காக ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

'எனது பிள்ளைகள் என்னைத் தேடுவார்கள், தற்செயலாக நான் இறந்து போனால் எனது மரணத்திற்கான காரணத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்யுங்கள். எங்களது தாய் வீரத்துடன் போராடி தனது உயிரை அர்ப்பணித்தவர் என்று அவர்கள் பெருமைப்படட்டும்' 

உள்ளத்தை உருகச் செய்கின்றது இந்தத் தியாகம். நீந்தத் தெரியாதவன் ஆற்றில் இறங்கி மூழ்கிப்போவது போலல்ல இந்தத் தியாகம். மாறாக நீச்சல் கற்றவன் விழுந்தவனை காப்பாற்ற முயற்சித்து மூழ்கிப்போனது போன்றதே இந்தத் தியாகம், இல்லை அதைவிட ஆபத்தானதொரு போராட்டத்தில் செய்யப்பட்ட தியாகம் இது!

இந்தத் தியாகத்திற்கு அசாதாரணமான துணிச்சலும் வீரமும் எதிர்நோக்கி வருகின்ற சிரமங்களை சகித்துக்கொள்வதற்கான பொறுமையும் இன்றியமையாததாகும். இத்தகைய பண்புகளோடு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி குறித்த தியாகத்தை செய்ய முன்வருவோருக்கு சுவன வாழ்வை பரிசளிக்காமல் நிச்சயம் அல்லாஹ் விடமாட்டான்.

கொரோனா பேயை (பயத்தை) விரட்டியவர்களால் தான் இந்த உன்னதமான இலக்கை அடைய முடியும். 

மரணத்திற்கு முன்னையது தியாகமாக இருக்கட்டும். மரணத்திற்கு பிந்தியது சுவனமாக இருக்கட்டும் இரண்டிற்கும் இடைப்பட்டதை தற்போதைய சூழலில் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம். என்றும் எமது தியாகங்கள் மனிதாபிமானத்திற்கான தியாகங்களாக அமையட்டும்.

2020 April 03



No comments

note