JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய சமயங்கள் முன்னெடுப்பு (URI), இலங்கை வன்முறைத் தடுப்பு மற்றும் சமாதானக் கட்டமைப்பு பயிற்சித் திட்டம் இரண்டாவது நாள் அமர்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

மனித வள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நிலையம், யக்கல, கம்பஹா ஐக்கிய சமயங்கள் முன்னெடுப்பு (URI) இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் “Violence Prevention & Peacebuilding Training Program” பயிற்சித் திட்டத்தின் இரண்டாவது நாள் அமர்வுகள் யக்கல, கம்பஹாவில் அமைந்துள்ள மனித வள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நிலையத்தில் 13 ம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


சமூக நல்லிணக்கம், இன ஒற்றுமை, வன்முறைத் தடுப்பு மற்றும் அமைதியான சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு இந்த செயல் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


இந்த பயிற்சி அமர்வுகளை சமாதானக் கட்டமைப்பாளர் சுஜித் அபேவிக்ரம மற்றும் ரவி கண்டகே உள்ளிட்ட வளவாளர்கள் முன்னெடுத்தார். 


சமூகங்களுக்கு இடையிலான விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பரஸ்பர புரிதல் மற்றும் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்கும் அணுகுமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.


பயிற்சியின் போது பல்வேறு விளையாட்டு மற்றும் குழுச் செயற்பாடுகள் மூலமாக சமூக முரண்பாடுகளை எவ்வாறு உரையாடல் மற்றும் புரிதலின் மூலம் தீர்க்க முடியும் என்பது எடுத்துரைக்கப்பட்டது. இரண்டு நபர்களுக்கிடையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின் மூலம் சமரசத்திற்கு கொண்டு வர முடியும் என்பதையும் பயிற்சியாளர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.


மேலும், எந்தவொரு பிரச்சினையையும் ஒரே கோணத்தில் மட்டும் பார்க்காமல் முழுமையாக அவதானித்து அணுக வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. 


சிறு வயதில் வழங்கப்படும் தவறான தகவல்கள், வரலாற்று புரிதல்கள் மற்றும் சமூக மனப்பாங்குகள் பின்னாளில் சமூகங்களுக்கு இடையிலான பிழையான எண்ணக்கருக்களை உருவாக்கக்கூடும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.


இன ஒற்றுமை மற்றும் சமூக முரண்பாடுகள் தொடர்பாக திகன உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மனிதர்களை வேறுபட்ட அடையாளங்களின் அடிப்படையில் பார்ப்பது எவ்வாறு வன்முறைகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கிறது என்பதையும் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர். 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் யுத்த காலங்களில் உருவாகும் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.


அத்துடன், “Peace Studies” போன்ற சமாதானக் கல்வி தொடர்பான உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் வழங்கப்படும் கற்கைநெறிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.


குழு செயற்பாடுகள் ஊடாக சரியான முடிவுகளை விரைவாக எடுக்கும் திறன், குழு ஒத்துழைப்பு, பரஸ்பர மதிப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.


இரண்டாவது நாள் நிகழ்வின் இறுதியில் பங்கேற்பாளர்களின் ஒற்றுமையையும் கலாசார பன்மைத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال