15 ஆவது முறையாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் கருத்தரங்கு மற்றும் மாநாட்டு நிகழ்வுகள்.
எம்.யூ.எம்.சனூன்
15 ஆவது முறையாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் கருத்தரங்கு மற்றும் மாநாடு நிகழ்வு, அண்மையில் (14) கொழும்பு பீ.எம்.ஐ.சீ.எச். லாவண்டர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உலக சமாதானம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல், சமூக விழிப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் மனிதாபிமான சேவைகளை வலுப்படுத்தல் போன்ற உயரிய நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஏ.ஆர்.அமீர்கான் தலைமையில் நடைபெற்றதுடன், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சமூக சேவையாளர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
மேலும், விசேட தேவையுடையவர்களுக்காக சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் மூலம் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக நலன் மற்றும் மனிதாபிமான சேவைகளை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கை, கலந்து கொண்டவர்களின் பாராட்டைப் பெற்றது.
இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி யாழ் மாவட்ட அமைப்பாளர் அப்துல் பரீத் ஆரிப் அவர்களால் வெளியிடப்பட்ட “சமாதான புத்தகம்” நூல் வெளியீடும் இந்நிகழ்வின் போது இடம்பெற்றது.
சமாதானம், மனித நேயம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த நூல் வெளியீடு நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.
வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய தூதரகத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான மௌசூன் ஹாஜியார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் பிரதியை, ஹுசைன் ரஷார்ட் ஜனாஸா அறக்கட்டளை பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், Global Asian Achievers Council அமைப்பின் மூலமாக சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமூக சேவையில் சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் சமூக சேவையாளர்களுக்கும் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அமைப்பின் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தோடு சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உற்சாகமான மற்றும் மரியாதை மிக்க சூழலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு மற்றும் மாநாட்டு நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.










No comments