பொறியியலாளர் புர்ஹானுத்தீன் மறைவுக்கு மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
மன்னார் மாவட்டம் உட்பட வன்னியையும் புத்தளம் மாவட்டத்தையும் பிரதானமாக மையப்படுத்தி,ஏனைய பகுதிகளிலும் தமது வாழ்நாளில் பல்வேறு சேவைகளைச் செய்துள்ள பொறியியலாளர் புர்ஹானுத்தீன் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ,அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மன்னார், அகத்திமுறிப்பை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் புர்ஹானுத்தீன்,நீண்ட காலமாக பாலாவி, நாகவில்லு, றசூல் நகரில் வசித்து வந்த நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
பேராதனை பல்கலைக் கழகப் பட்டதாரியான அவர், அதிக காலம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியலாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த காலங்களில்,கட்சியின் உயர்பீட உறுப்பினராக இருந்துள்ளதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார்.
எங்களது ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்,வன்னியின் மைந்தன் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் ஆகியோருடனும், என்னுடனும் இணைந்து பல்வேறு பணிகளில் அவர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.
அசையாத இறை நம்பிக்கையுடன், இஸ்லாமிய சன்மார்க்க வரையறைகளைச் சரிவரப் பேணிவந்த மர்ஹூம் புர்ஹானுத்தீன் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள்வானாக.
ஆமீன்.

No comments