ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.
நான்காவது தொடர்........
2019.04.21 இல் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தாக்குதல் நடாத்த இருந்த குண்டுதாரிக்கு இறுதி நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததனால் தாக்குதல் திட்டத்தை கைவிட்டு தெஹிவளைக்கு சென்று அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் மிக நீண்ட நேரமாக இருந்துள்ளார். அங்கிருந்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதனால் இவரை விசாரித்துள்ளனர்.
இந்த பள்ளிவாசலை அண்மித்ததாகவே ஆசாத் மௌலானாவின் வீடு இருந்ததாகவும், அந்த தொலைபேசி அழைப்பு ஆசாத் மௌலானாவிடமிருந்து வந்திருக்கலாம் அதனால் அவரை சந்திப்பதற்காக அங்கு காத்திருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதன்மூலம் தாக்குதல்தாரிகளை வழிநடாத்தும் பணியில் ஆசாத் மௌலானாவும் ஈடுபட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினத்தில் தான் மட்டக்களப்பில் இருந்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகிறார்.
ராஜபக்சாக்களை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்காக கோட்டாவை ஜனாதிபதியாக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அப்படியென்றால் ஒரு சிங்களவரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக இஸ்லாமியர்கள், அதிலும் மார்க்கம் கற்றவர்கள் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்களா ?
அன்றைய நல்லாட்சியின் தலைவர்களான மைத்ரி – ரணில் ஆகியோர்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்த நிலையிலும், 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியடைந்த நிலையிலும், 2019 இல் நடைபெற உள்ள தேர்தலில் ராஜபக்சாக்களே ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாகத்தான் தங்களது வாக்கு வங்கிகளை சிங்கள பிரதேசங்களில் அதிகரிக்க முடியுமென்று ராஜபக்சாக்கள் எண்ணினார்களா ?
அல்லது மைத்ரியும், ரணிலும் இல்லாமல் சஜித் பிரேமதாசா தலைமையிலான புதிய சவால்மிக்க சக்தி ஒன்றை தேர்தலில் எதிர்கொள்வதற்கு இவ்வாறான தாக்குதல் தேவைப்பட்டதா ? அல்லது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, பாதாள குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற பிரச்சாரத்திற்காகவா ? என்ற பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விவகாரத்தில் (வெளிப்பார்வையில்) சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிள்ளையானை பார்ப்பதற்கு ஆசாத் மௌலானா சென்றிருந்தபோது சஹ்ரானுக்கு சகோதர முறையில் உள்ள தீவிரபோக்குடைய மௌலவி ஒருவர் சிறையில் தன்னுடன் இருப்பதாகவும் அவருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு பணித்ததாகவும், அதற்காக பிள்ளையானின் அறிவுறுத்தலின் பிரகாரமே அந்த மௌலவியை சட்டத்தரணிகளின் உதவியுடன் பிணையில் எடுத்ததாகவும் ஆசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் சிறையில் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக மகிந்த ராஜபக்ச சிறைக்கு சென்றதன் மூலம் ராஜபக்ச குடும்பத்துக்கும், பிள்ளையானுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தினை உலகம் அப்போது புரிந்துகொண்டது.
இலங்கை வரலாற்றில் சிறையில் இருந்தவாறு பொது தேர்தலில் போட்டியிட்டு பிள்ளையான் வெற்றி பெற்றதானது ஒரு சாதனையாகும். பின்பு கோத்தாபாய ஆட்சி அமைத்ததும் பிள்ளையான் சிறையிலிருந்து 26.11.2020 ம் திகதி விடுதலை செய்யப்பட்டதுடன், பிள்ளையான்மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 11.01.2021 ம் திகதி கோத்தாவின் ஆட்சியில் வாபஸ் பெறப்பட்டு பிள்ளையான் முற்றாக விடுவிப்பு செய்யப்பட்டார்.
தொடரும்......
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments