முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும் - உலமா சபை பொதுச்செயலாளர்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார்.
அன்னாரின் இளைய மகன் அண்மையில் காலம் சென்றதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது இல்லத்துக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடு, அத்துடன் ஏனைய மாதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளைப் பெற்றவர்களே! இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஒன்றாய் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகரும் நடப்புத் தலைவருமான அஸ்-ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா சார்பில் அவருடைய சகோதரர் அஸ்-ஸெய்யித் திஹாம் றிபாய் மௌலானா மற்றும் ஏனைய ஸ்தாபகர்களான அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அஷ். அப்துல் முஜீப் (கபூரி), நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments