Breaking News

இஸ்லாமியப் பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி மறைவையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

நவீன உலகின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களுள்   பூரண நிலவாக ஒளிவீசிப் பிரகாசித்த அல்லாமா யூசுப் அல் கர்ளாவி  காலமான சம்பவம் நமது சமுதாயத்தின் அறிவுசார் பரம்பரையினரை வெகுவாகப் பாதித்து, அதிர்ச்சியூட்டிய நிகழ்வாகும்.அத்துடன் நமது வாழ்நாட்களை அர்த்தமுள்ளதாக்கிய அந்த மா மேதையின் மறைவு இலகுவில் ஜீரணிக்க முடியாத பேரிழப்பாகும். 

இவ்வாறு அன்னாரின் மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அதில்அவர்மேலும்தெரிவித்துள்ளதாவது,

இஸ்லாமிய சன்மார்க்க புலமைத்துவமானது அதனைப் பின்பற்றியொழுகும்  பொதுமக்கள் மத்தியிலிருந்து வெகுவாக அந்நியப்பட்ட ஒரு பாரம்பரியமாக வளர்ந்து வருகையில், அதனை வெகுஜன பாரம்பரிய மொழி ஊடகங்களில் கொண்டு வந்த பிதா மகராக யூசுப் அல் கர்ளாவி திகழ்கின்றார்.

இஸ்லாமிய அறிவியல் சம்பிரதாயம் கற்றறிந்தவர்களுக்கிடையிலான உரையாடல் வழியாகவே  அநேகமாக சென்ற நூற்றாண்டு வரை இருந்து வந்தது. அதனை வெகு ஜனங்களின் அறிவுப் பார்வைக்கு இட்டுச் சென்ற  பேரறிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக தற்கால இஸ்லாமிய உலகு  ஷெய்க் அல் கர்ளாவியை அறிந்துவைத்துள்ளது. அல் குர்ஆனையும், நபிகளாரின் சொல்,செயல், அங்கீகாரத்தையும் (ஹதீஸ்) இஸ்லாமிய ஷரிஆ ஆகவும் ,மெய்யியல் ஆகவும் சராசரி மக்களின் அன்றாட உரையாடல் பொருளாக ஆக்கிய ய பெருமை ஷெய்க் அல் கர்ளாவியையே சாரும்.

பிக்ஹுல் அவ்வலியத் (பிக்ஹுவில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய அம்சங்கள்), பிக்ஹுத் தைஸீர் (பிக்ஹுவில் இலகுபடுத்தல் கோட்பாடு), பிக்ஹுல் அகல்லியாத் (பிக்ஹுவில் சிறுபான்மையினருக்கான சிந்தனை முறை) என்பவற்றில் அறிவு மொழியையும் பாரம்பரியத்தையும் மக்களை இலகுவாகச் சென்றடைய வழியமைத்து, இஸ்லாமிய மெய்யியலை சராசரி மனிதனின் வாசல்படி வரை கொண்டு வந்து சேர்த்தமை அன்னார் நிகழ்த்திய அளப்பரிய சாதனையாகும்.

இதனால், இஸ்லாம் காலம் கடந்த மார்க்கம் என்று நிறுவ முயன்ற மேலைத்தேச சிந்தனைப் போக்கைத் தழுவிய புலமைத்துவப் பாரம்பரியம் வாயடைத்துப் போய் நின்றது.

அரபு மொழியில் அவர் எழுதிய ஆய்வு நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்துள்ளன.

 இத்தகைய பல்துறை ஆளுமை சடுதியாகச் சாய்ந்து விட்டது நமது சமுதாயத்திற்கு நேர்ந்துள்ள பேரிழப்பாகும்.

நாங்கள் அல்லாமா யூஸுப் கர்ளாவி அவர்களை கதார் நாட்டில் சந்தித்துக் கலந்துரையாடிய சந்தர்ப்பமொன்றில், “தேசியவாழ்வில் பெரும்பான்மைச் சமூகங்களோடு கரைந்து போகாமல் கலந்து வாழ வேண்டும். அத்துடன், அமைப்புகளாகவும், இயக்கங்களாகவும் பிளவு பட்டுப் பிரிந்து விடக் கூடாது" என்று கூறிய அறிவுரைகள் இன்னமும் எங்கள் காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன.

இன்னும் இம்மைக்கும்,மறுமைக்கும் பயனளிக்கத்தக்க பல்வேறு ஆலோசனைகளை அவர் எங்களுக்கு வழங்கினார்.

வாழ்நாட்களை முழுமையாக இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்  ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள்வானாக.




No comments

note