Breaking News

கிழக்கில் ஆசிரியர் போராட்டத்தை மழுங்கடிக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் முனைப்பு;-தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றச்சாட்டு-

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தை கிழக்கு மாகாணத்தில் மழுங்கடிப்பதற்கு சில அரசியல்வாதிகளும் கல்விப் பணிப்பாளர்களும் முனைப்புக் காட்டுவதாக தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக பேரவையின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;


ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஆலோசனை கூட்டம் என்ற போர்வையில் சில கல்வி வலயங்களில் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர் பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டு, பாடசாலைகளை திறக்க வற்புறுத்தி வருவதுடன் மிரட்டல்களும் விடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு கல்வி வலயங்களில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின்

அனுசரணையுடன் அவர்களது இணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் எடுபிடிகள் பலர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.


அத்துடன் சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கூட ஆசிரியர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளுக்கு துணை போவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனை எமது பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.


ஆகையினால், கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என எமது பேரவை கேட்டுக் கொள்வதுடன் தமது எஜமானர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் விலகியிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.


ஆசிரியர்களது போராட்டத்தை ஆதரிக்கா விட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள். ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைகளுக்கு வரவழைத்தாலும் அவர்கள் மனம்வைத்தால் மட்டுமே கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக நடைபெறும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்- எனவும் தென்கிழக்கு கல்விப் பேரவை வலியுறுத்தியுள்ளது.




No comments

note