மு.கா. தலைமைத்துவத்தை மாற்ற கிழக்கில் முயற்சியா..?ஹக்கீமை விடத் தகுதியானவர் இல்லை என்கிறார் கல்முனை மேயர் றகீப்..!
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் அவர்களை விடத் தகுதியான ஒருவர் கட்சிக்குள்ளோ கட்சிக்கு வெளியிலோ இருப்பதாகத் தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால் கட்சியின் நீண்ட கால உயர்பீட உறுப்பினர் என்ற ரீதியிலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரப் பதவியில் இருப்பவன் என்ற அடிப்படையிலும் தலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் கிழக்கில் கட்சி முக்கியஸ்தர்களினால் முன்னெடுக்கப்படவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது முற்றுமுழுதாக எமது கட்சிக்குள் பிளவுகளையும் போராளிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்காக வெளிச்சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற திட்டமிட்ட சூழ்ச்சியாகும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கிறார். தேசிய ரீதியில் அனைத்து இனங்களும் மதிக்கக்கூடிய ஒரு மிதவாதத் தலைவராக அவர் நோக்கப்படுகிறார். சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்டிருக்கின்ற ஒரு தேசியத் தலைமையாகவும் இராஜதந்திர தொடர்புகளை பேணக்கூடிய மதிநுட்பமிக்க தலைமையாகவும் அவர் திகழ்கிறார்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் குரல் எழுப்பி வருகின்ற ஒரு துணிச்சல்மிகு தலைவராகவும் ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார்.
இந்நிலையில், கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் உயர் மட்டத்திலோ போராளிகள் மத்தியிலோ எழவில்லை என்பதை ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.
தவிரவும், கட்சியின் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் அவர்களை விடத் தகுதியும் பொருத்தமும் உடைய வேறொருவர் கட்சிக்குள்ளோ கட்சிக்கு வெளியிலோ இருப்பதாகத் தெரியவில்லை- எனவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments