Breaking News

மலரும் இஸ்லாமிய புத்தாண்டில் நலமாக வாழ அருள் புரியுமாறு இறைவனை இறைஞ்சுவோம் - வாழ்த்துச் செய்தியில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

இலங்கையிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் வாழும் மக்கள் பயங்கரமான கொவிட் - 19 நோய்த்  தொற்று மற்றும் இன்னல்களிலிருந்து விடுபட்டு நலமாகவும், வளமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவதாக ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய புத்தாண்டு ஆரம்பமாவதையிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

அண்மை கால வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மக்கள் வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்துவரும் வேளையில், இஸ்லாமிய புத்தாண்டை சந்திக்கின்றோம்.

 

இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பின்படி இறுதி மாதமான துல்ஹஜ் தியாகத்தின் வலிமையை வலியுறுத்திவிட்டு மறைய, முதல் மாதமான முஹர்ரமும் தியாகத்தின் சிறப்பை உணர்த்தியவாறே உதிப்பது சிறப்பம்சமாகும்.


நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்), எதிரிகளின் தொல்லைகள் எல்லை மீறியதன் விளைவாக, புனித மக்காவிலிருந்து புனித மதீனாவுக்கு இடம்பெயர நேர்ந்த ஹிஜ்ரத் சம்பவத்தை அடியொட்டியே இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த வரலாற்றுச் சாதனையானது, இஸ்லாம் உலகெங்கும் வேகமாகப் பரவி வியாபிப்பதற்கு வழிகோலியது.


பெருமானார் முஹம்மத்  (ஸல்) அவர்களின் ஆருயிர்ப் பேரர் இமாம் ஹுஸைன் (ரழி) ,  கர்பலா களத்தில் சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக தமது இன்னுயிரையே நீத்த துக்ககரமான நிகழ்வும் கூட இஸ்லாமிய புத்தாண்டின் முஹர்ரம் மாதத்திலேயே  இடம்பெற்றது.

 

இவ்வாறான பல்வேறு காரணங்களால் இஸ்லாமிய புத்தாண்டு உலகளாவிய முஸ்லிம் சமூகத்தினால் மிகவும் நன்றியறிதலோடு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


மலரும் இஸ்லாமிய புத்தாண்டில் மனித குலத்திற்கு நன்மையை பயக்கும் விதத்தில் மகத்தான மாற்றங்கள் ஏற்படுவதற்கும், அல்லாஹ்வினால் அருளப்பட்ட  அல் குர்ஆன் மற்றும் நபிகள் கோமான் முஹம்மத் (ஸல்) திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ் ஆகியவற்றை பின்பற்றியொழுகி, உச்சக் கட்ட சகிப்புத் தன்மையுடனும், தளராத இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து, இம்மை,மறுமை ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவதற்கும் இந் நாளில் திடசங்கற்பம் பூணுவோமாக!.


இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments