Breaking News

வானில் இருந்து வெடில் மழை... புலிகளைத் தேடும் ஹெலிகொப்டர்... அதிரும் கொழும்பு...

[தொடர்-06]

கொழும்பில் பல சம்பவங்கள்.அவற்றுள் இதுவும் ஒன்று.


ஓரளவு அமைதி அன்றைய தினம்.ஜூலை 29 ஆம் திகதி.


எட்டிப் பார்க்கின்றன தலைகள் வீதியை.ஓரளவு மக்கள் நடமாட்டம்.


அகதி முகாம்களுக்குச் செல்கிறார்கள்.உறவினர்களை பார்க்கிறார்கள்.கட்டிப்பிடித்து அழுகிறார்கள் .உணவு-உடைகள் கொடுத்து உதவுகிறார்கள்.


இத்தோடு நின்றுவிட வேண்டும்.எல்லோரினதும் பிராத்தனை அது.அது நடந்ததா...? 


இல்லை...


மீண்டும் பிரச்சினை.என்ன அது...?


திடீர் சலசலப்பு கொழும்பில்.காரணம்...?


சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் இளைஞர்கள் இருவர்.சிங்கள இளைஞர்கள்.  


காஸ் வேர்க்ஸ் வீதியில் சம்பவம்.காலை 10.30 மணி இருக்கும்....


பரவுகிறது தகவல்.காட்டுத் தீயாய்...


''கொழும்பில் புலிகள்.சிங்களவர்களை கொல்கிறார்கள்.படையினருடன் சண்டை.அதிக மரணம்.''


இவ்வாறு வாய்க்கு வந்தமாதிரி...மீண்டும் தமிழர்களை அழிக்க வசதியாக...காடையர்களை ஒன்று திரட்டுவதற்கு ஏதுவாக...


கூடுகிறது கூட்டம்.பெரும் கூட்டம்.சம்பவ இடத்தில்...


விரைந்து வருகிறார்கள் படையினர்.நடக்கிறது  வேட்டை.தேடுதல் வேட்டை.மூலைமுடுக்குகள் எல்லாம்...


அங்கே ஒரு கட்டடம்.'அதாம் அலி' கட்டடம்.


அதற்குள்தான் புலிகள்.அங்கிருந்துதான் சுட்டார்கள்.


தகவல் கொடுக்கிறார்கள் படையினருக்கு.அங்கிருந்த சிலரின் தகவல் இது.பிழையான தகவல்.


பிறகு என்ன...?


சுற்றி வளைக்கிறார்கள் கட்டடத்தை.தரைப்படை-கடற்படை-விமானப்படை-பொலிஸார் இப்படி எல்லோரும் ஒன்றிணைந்து...


பெரும் போர் ஒன்றுக்குத் தாயார்.உதவிக்கு ஹெலிகொப்டரும்...


வட்டமிடுகிறது வானில்..சுட்டுத் தள்ளுகிறது அங்கிருந்து. 


பதம் பார்க்கிறது கட்டடத்தை.அதிர்கிறது அப்பகுதியே...


தலை தெறிக்க ஓடுகிறது கூட்டம்.அங்கு சுற்றி நின்ற கூட்டம்...


இப்போது படையினர் உள்ளே.கட்டடத்தின் உள்ளே.


நுழைகிறார்கள் மெல்ல..சுட்டுக்கொண்டே...


படையினரின் ஒரு பிரிவு வெளியே..கட்டடத்தைச் சுற்றி..


புலிகள் தப்பி ஓட முடியாதவாறு....


இன்னொரு பிரிவு உள்ளே...தீவிர தேடுதல்.


யாருமில்லை.எதுவுமில்லை.ஆயுதங்களும் இல்லை.புலிகள் இருந்ததற்கான தடயமும் இல்லை...


எல்லாம் வதந்தி...


அப்போ அந்த இளைஞர்களை சுட்டது யார்...? நடக்கிறது விசாரணை.தேடுகிறார்கள் அந்தப் பகுதி எங்கும்.சல்லடை போட்டு....


எல்லோரிடமும் விசாரணை.


புலிகள் வரவில்லை.கென்போர்ம்....


ஆனால்,வதந்தி மட்டும் நிற்கவில்லை.பரவிக்கொண்டே இருக்கிறது. 


சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறார்கள் காடையர்கள்.மீண்டும் ஒரு தாக்குதலுக்கு...


அப்படியே நடக்கிறது...


நிலைமை மோசம்.தப்பி ஓடுகிறார்கள் வீதியில் நின்ற தமிழர்கள்.வீதியால் வந்த வாகனங்களில் ஏறிக்கொண்டு...


ஆனால்,ஆபத்தே அதுதான்.எல்லா வாகனங்களும் சோதனை.புலிகளைத் தேடி...


படையினர் புலிகளைத் தேட...காடையர்கள் அப்பாவிகளைத் தேட...


நடக்கிறது வேட்டை.மீண்டும் வேட்டை.


மீண்டும் கொடூரம்.அதே கொடூரம்...


ஒவ்வொரு வாகனங்களாக சோதனை.நிறுத்தி நிறுத்தி...


உள்ளே தமிழர்கள் இருந்தால் கதை காலி.இறக்கி எடுத்து வெட்டிக் கொலை.


 தமிழர்களின் வாகனங்கள் என்றால் அவ்வளவுதான்....கூண்டோடு சரி.


ஆம்...வாகனத்தோடு சேர்த்து தீ...


சில முஸ்லிம்களும் பலி.


குறிப்பாக,கிருல வீதியில் ஒரு தமிழர்.அத்திட்டிய வீதியில் 11 பேர்.


எல்லோரும் எரித்தே கொலை.


அதே வீதியில் ஒரு வேன்.அதற்குள் ஐந்து சடலங்கள்.இரண்டு தமிழர்கள்.மூன்று முஸ்லிம்கள்.


ஐவரும் வெட்டியே கொலை....


அரசு கண்மூடி நிற்க.. மிக சிம்பிலாக நடக்கிறது இதெல்லாம்.


ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலேயே கலவரம்.


எவ்வளவு துணிச்சல் இவர்களுக்கு.


ஜூலை 25 ஆம் திகதி பாதுகாப்பு சபையின் கூட்டம்.ஜனாதிபதி மாளிகையில்...


கூட்டம் நடக்கிறது.எரிகின்றன தமிழர்களின் கடைகள்.அதற்கு அருகில்..ஜனாதிபதி மாளிகைக்கு அருகில்...


பிரிஸ்டல் பில்டிங்க்,அம்பாள் கபே,சாரதாஸ் இப்படிப் பல கடைகள்.


எல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு மிக அருகில்..நூறு,இருநூறு மீற்றர் தூரம்தான்..


அதுவும் பாதுகாப்புச் சபை கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது...


கூட்டத்தில் இருந்தவர்களுக்கே பட்டிருக்கும் அந்தத் தீயின் சூடு.அவ்வளவு அருகில்....


கொழும்பில் மட்டுமா...?


அப்படியே பரவுகிறது அந்தத் தீ.ஏனைய மாவாட்டங்களுக்கும்...


கழுத்துறையிலும்  கலவரம்.எரிகிறது.TKVS ஸ்டோர்ஸ்.


அப்போது அதன் உரிமையாளர் இரண்டாவது மாடியில்...


கீழே நெருப்பு.ஆக்கிரமித்துவிட்டது முழுவதையும்.கீழால் வரவே முடியாது.


இடம் தேடுகிறார் தப்புவதற்கு.வேறு வழியே இல்லை.பாய்வதுதான் ஒரே வழி.


அப்படியே செய்கிறார்.ஆனால்,கீழே காடையர்கள்.விடுவார்களா...?


பிடித்துவிட்டார்கள் அவரை...


கத்துகிறார்-கதறுகிறார்-கெஞ்சுகிறார்.


விடுவதாக இல்லை.தூக்கி வீசுகிறார்கள் தீக்குள்.தக தகவென எரியும் தீ.


துடி துடித்துப் பிரிகிறது அந்த உயிர்.


சாம்பல்.....கடையோடு சேர்ந்து அவரும்....


மேலும் பல சம்பவங்கள் கழுத்துறையில்...


கொலை-கொள்ளை-எரிப்பு என எல்லாம்...


கண்டிக்கும் நகர்கிறது கலவரம்.பற்றி எரிகிறது டெல்டா பார்மசி.பேராதனை வீதியில்...


லக்சல கட்டடத்துக்கு அருகில் ஒரு கடை.அதற்கும் தீ.அதுவும் சரி.


காசல்-கிங்க்ஸ்-கொழும்பு மற்றும் திருகோணமலை வீதிகளில் இருந்த கடைகளுக்கும் தீ.


ஹட்டன்-நாவலப்பிட்டியிலும் சம்பவம்.


பண்டாரவளை, ஹலி எல, லுணுகல,வெலிமடை,பாசறை,நுவரெலியா ஆகிய இடங்களும் தப்பவில்லை.


ஜூலை கலவர படுகொலைகளுள் முக்கியமானது வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை.


தங்கதுரை,குட்டிமணி என 51 பேர் கொலை.சிங்கள கைதிகளால்...


இந்தத் பேரழிவைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன...?


சூத்திரதாரிகள் யார்...?


பார்ப்போம் அடுத்த தொடரில்...


[தொடரும்]


ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக்



No comments