உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
என் இதயத்திற்கினிய குடும்ப உறவுகள், சொந்தங்கள், அயலவர்கள், நன்மைகள் செய்வோம் என்று பரஸ்பரம் ஒத்துழைக்கின்ற சேவகர்கள், சமூக ஆர்வலர்கள், தலைவர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்!
ஹஜ் என்பதன் பொருள் நாடிச் செல்வதல்லவா?!
அல்லாஹ்வின் வீட்டை நாடிச்செல்ல வேண்டும் என்று உறுதியான நாட்டம் கொண்டவர்களில் சிலர் சென்றும் இருக்கிறார்கள். கொரோனா போன்ற அசௌகரியங்களால் செல்ல முடியாதவர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களது உறுதியான நாட்டம் காரணமாக ஹஜ் செய்த பலனை அவர்கள் நிச்சயம் அடைவார்கள் என்பது எமக்குத் தெரியும்.
அதே போன்றுதான் ஏனைய நன்மைகளும்; நன்மைகள் வாழ வேண்டும் என்று உறுதியான நாட்டம் கொண்டவர்களால் தான் உலகில் நன்மைகள் பூத்துக் காய்த்துக் கனிகின்றன. தீமைகள்; அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூணுபவர்களாலேயே உலகம் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றது. அல்லாஹ்வும் அதனையே நாடுகிறான், அதனையே ஏவுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ் நீதியையும் பரோபகாரத்தையும் ஏவுகிறான். மேலும் தேவையுடையோருக்கு மனமுவந்து உதவி செய்யுமாறும் ஏவுகின்றான். அநீதியான, மானக்கேடான விடயங்களை அவன் ஒருபோதும் ஏவவில்லை. மாற்றமாக அவற்றை அவன் தடுக்கின்றான்.
இவ்விடயங்கள் அனைத்திலும் நமது உறுதியான நாட்டங்களே நடைமுறைகளாக உருப்பெறுகின்றன.
ஹஜ் என்பது உறுதியான நாட்டம் அல்லவா?!
மீண்டும் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்.
(மேற்படி பெருநாள் வாழ்த்துச் செய்தியானது, இன்று மாலை அவருக்கு தொலைபேசியூடாக குடும்பத்தினருடன் பேசுவதற்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்துக்குள் அவரால் வாசித்துக் காட்டப்பட்டதாகும். அவரின் வேண்டுகோளுக்கிணங்க இதனை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.)

No comments