பள்ளிவாயில்கள் திறக்கப்பட்டு விட்டன! - அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)
வழிபாட்டுத் தலங்கள் வழிபாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்ற செய்தி முஸ்லிம்களாகிய எமக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்!
காரணம் மாதக்கணக்கில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்ஆ என்பன இல்லாமல் நாம் மிகவும் மன வேதனையடைந்தோம். 27 மடங்கு நன்மையைப் பெற்றுத் தரும் கூட்டுத் தொழுகை எமக்கு இல்லாமல் இருந்தமை பெரும் கவலையைத் தந்தது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிவாசல்களுக்கு செல்லலாம் என்ற அனுமதி தரப்பட்டிருப்பது அந்த வகையில் மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது.
இருப்பினும் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தற்போது தரப்பட்டிருக்கும் அனுமதியை முஸ்லிம் சமூகம் மிக கவனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது பள்ளிவாயலுக்கு வருவோர் ஏற்கனவே தரப்பட்டிருக்கும் அடிப்படையான சுகாதார விதிகளை மிகக் கவனமாக பின்பற்ற வேண்டும்.
+வீட்டில் உளூச் செய்து விட்டு வருவது
+முகக் கவசத்தை உரிய முறையில் அணிந்து வருவது
+ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணுவது
+பள்ளிவாயிலில் மிக அதிக நேரம் கழிக்காமல் அங்கிருந்து வெளியேறுவது
+முஸாஃபஹா, முஆனகா செய்வதைத் தவிர்ப்பது
+அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக வருகை தராமலிருப்பது
+பள்ளிக்கு செல்லும் போது முஸல்லாவை எடுத்துச் செல்வது
என்பவற்றை கடுமையாக அனுசரித்துக் கொள்ள வேண்டும்
தமக்கு இருமல் தடுமல் காய்ச்சல் போன்ற கொரோனாவின் அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொற்றா நோய்கள் எனப்படும் கடுமையான நோய்களால் ஏற்கனவே பிடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை இருப்பதனால் அவர்கள் பள்ளிவாயலுக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது அவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பாக அமையும்.
பள்ளிவாயல் நிர்வாகிகள் தமது பொறுப்பில் உள்ள பள்ளிவாயல்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ய வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன:
+ கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் சமூகத்தின் விகிதாசாரம் 30% ஐதையும் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன:-
# முஸ்லிம் சமூகத்தவர்கள் திருமண வீடுகள் ஜனாஸா வீடுகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடந்து கொண்டமை
#குறிப்பாக இளைஞர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி கொரோனா நோயை காவிக்கொண்டு வீட்டுக்குள் வந்து தொற்றா நோய்களால் (Non Communicable Diseases) பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் அவற்றை பரப்புகின்ற நோய்க் காவிகளாக இருக்கின்றமை.
#முஸ்லிம் சமூகத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களது விகிதாசாரம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது அதிகமாக இருப்பது. குறிப்பாக சுவாச நோய்கள், இருதய நோய்கள், கேன்சர் போன்ற (NCD) தொற்றா நோய்களால் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஏற்கனவே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் இத்தகைய நோயாளிகளுக்கு கொரோனா இலகுவில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதனாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
#முஸ்லிம் சமூகத்தில் நோய்த்தொற்று சம்பந்தமான சில பிழையான நம்பிக்கைகள் இருப்பது நிலையை மேலும் மோசமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது 'களா கத்ர் ' பற்றியும் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் மருந்துகளைப் பாவித்தல் போன்றன தொடர்பாகவும் பிழையான நம்பிக்கைகள் நிலவுவது சிலர் அசிரத்தையாக இருப்பதற்கான காரணமாக இனம்காணப்பட்டிருக்கிறது.
எனவே தற்போது வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதி பற்றி நாம் தீவிரமாக சிந்தித்து எமது பள்ளிவாயல் நடவடிக்கைகளை மாத்திரமல்ல எமது சமூக உறவுகளையும் கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
"நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் சுத்தமாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்" என்று குர்ஆனிலும்,
"சுத்தம் ஈமானின் பாதி, சிங்கத்திடமிருந்து தப்பியோடுவது போன்று குஷ்டரோகியிடமிருந்து தப்பியோடுங்கள்,தொற்றுநோய்கள் உள்ள பிரதேசங்களில் வாழ்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம், தொற்றுநோய் இருக்கின்ற பிரதேசங்களுக்குள் வெளியார் நுழையக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் ஹதீஸ்களிலும் கூறி இருப்பதனாலும் இஸ்லாம் சுத்தம் சுகாதாரமான வாழ்வு முறைக்கும் தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கும் அதிகமான முக்கியத்துவத்தை வழங்கியிருக்கின்றது.
قال رجُلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم : أُرسِلُ ناقتي وأتوكَّلُ ؟ قال : (اعقِلْها وتوكَّلْ):
تخريج صحيح ابن حبان .خلاصة حكم المحدث : حديث حسن
"ஒட்டகத்தை கட்டு அல்லாஹ்வில் தவக்குல் வை " என்ற நபி(ஸல்) அவர்களது வழிகாட்டல் இச்சந்தர்ப்பத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும்.
₹ நோய்கள் அணுகிவிடாதிருக்க எம்மால் முடிந்த தற்காப்பு முயற்சிகள் அனைத்தையும் செய்வோம்!
₹ அவற்றையும் மீறி நோய் வந்தால் அவற்றிலிருந்து மீள எம்மால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்!
₹ இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் துஆக்களில் ஈடுபடுவோம். அதாவது அல்லாஹ்வின் உதவியை எப்போதும் எதிர்பார்ப்போம்.
₹ முடிவுகளை அல்லாஹ் மட்டுமே தீர்மானிப்பான்.
₹ அவனது முடிவுகளை மனத்திருப்தியுடனும் பொறுமையோடும் முழுமனதோடும் அங்கீகரிப்போம்!
எல்லா நிகழ்வுகளுக்கும் முடிவுகளுக்குமான காரணங்களை அவன் மாத்திரமே முழுமையாக அறிந்திருக்கிறான்.
செயல்கள் எமது கடமை;
தீர்மானங்கள் அவனது உரிமை.
اياك نعبد واياك نستعين
உனக்கு மாத்திரமே இபாதத் செய்கிறோம். உன்னிடம் மாத்திரமே உதவிதேடுகிறோம்.
இங்கு இபாதத் செய்து விட்டுத் தான் உதவி தேடுகிறோம். எனவே இபாதத்துக்குப் பின்னரே உதவி தேடப்பட வேண்டும். அது நிபந்தனையாகும்.
தற்காப்பு முயற்சிகள் இபாதத் ஆகும். அது முதலில் நடக்க வேண்டும்.
உதவி தேடல், துஆ கேட்டல் இரண்டாவதாக அல்லது அதனுடன் இணைந்ததாக நடக்க வேண்டும்.
யா அல்லாஹ் எம் அனைவரையும் உன்னை உண்மையாகவே இபாதத் செய்தவர்களதும் உனது தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றவர்களதும் கூட்டத்தில் சேர்த்து எம் அனைவருக்கும் மனநிறைவையும் நாளை மறுமையில் விமோசனத்தையும் தருவாயாக!
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا
10.07.2021.




No comments