தமிழர்களை காப்பாற்றிய சிங்களவர்கள்-முஸ்லிம்கள்:.. தமிழ் பெண்களை பாதுகாத்த பௌத்த பிக்கு... முதியவரை காப்பாற்றிய சிங்கள பெண்கள்...
[தொடர்-05]
தொடர்ச்சியாக 7 நாட்கள் கலவரம்.நடத்தியவர்கள் சில சிங்கள இனவாதிகள்.அன்றைய அரசின் கைக்கூலிகள்.
பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.இப்படியான கொடூரத்தை அவர்கள் விரும்பவில்லை.முடிந்தவரை தமிழர்க்கு உதவினார்கள்.
சிங்கள வீடுகள் பலவற்றில் அதிகமான தமிழர்கள் அன்று.வாடகைக்கு...
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் வீட்டு உரிமையாளர்களே.! அந்த சிங்களவர்களே.!
தமிழர்களை அனுப்பிவிடுமாறு காடையர்கள் அந்த சிங்களவர்களுக்கு மிரட்டல்.புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு.
இருந்தும்,பாதுகாத்தனர்.ஓரிரு நாட்கள்.அந்த வீடுகளின் சீலிங் உள்ளே புகுத்தி.
பகல் முழுவதும் சீலிங்கிற்கு உள்ளே.இரவில் கீழே.மூன்று நேர உணவும் சிங்களவர்களிடம் இருந்தே! வீட்டு உரிமையாளர்களிடம் இருந்தே!
இப்படித்தான் ஒரு வீடு.
எல்லோரும் சிதறி ஓட...ஒருவர் மட்டும் வீட்டில்.சீலிங்கிற்கு உள்ளே...
வருகிறார்கள் காடையர்கள்.உடைக்கிறார்கள் கதவை.எரிக்கிறார்கள் வீட்டை.பெற்றோல் குண்டை வீசி...
மேலே இருப்பவர்க்குத் தெரியாது.கீழே நடப்பது.மேலே அவர் இருப்பது தெரியாது.இந்தக் காடையர்களுக்கு...
கீழே இறங்குகிறார்.அவர்கள் சென்றதும்...
எல்லாம் எரிந்து சாம்பல்.உடமைகள் எல்லாம்.அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை அவர்.
பல தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றவர்களும் சிங்களவர்களே.!
கொள்ளுப்பிட்டியில் ஒரு சம்பவம்...
கடைகளை எரித்து நாசம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் காடையர்கள்.
அதில் ஒன்று சரஸ்வதி லொட்ஜ்.பிரபல்யமான தோசைக்கடை அது.இன்றும்தான்.
உடைக்கிறார்கள் அதை.உள்ளே ஒரு முதியவர்.எல்லோரும் தப்பியோட...அவர் மட்டும் அதற்குள்.ஒளிந்த நிலையில்...
சிக்குகிறார்கள் இப்போது.காடையர்களிடம்...
முதியவர் என்றுகூடப் பார்க்கவில்லை.கடும் தாக்குதல்.வழிந்தோடுகிறது இரத்தம்.
மன்றாடுகிறார்.உயிர்ப் பிச்சை கேட்டு....
விடுவதாக இல்லை அவர்கள்.கொல்வதற்குத் தயார்.
வேடிக்கை பார்க்கிறது ஒரு கூட்டம்.பெரும் கூட்டம்.சிங்கள மக்களே அவர்கள்.
அதற்குள் பல பெண்கள்.சிங்கள பெண்கள்.சிங்கப் பெண்கள்.மனிதாபிமானமிக்க பெண்கள்.
பாய்ந்து செல்கிறார்கள் முன்னே.காடையர்களின் முன்னே.
கடும் வாக்குவாதம் அவர்களுடன்...
இறுதியில் தோல்வி.அந்தக் காடையர்களுக்கு...விட்டுச் செல்கிறார்கள் முதியவரை.
உயிர் பிழைக்கிறார் அந்தப் பெரியவர்.அந்தப் பெண்களின் துணிச்சலால்...மனிதாபிமானத்தால்...
மற்றுமொரு சம்பவம்.இது பம்பலப்பிட்டியில்.இராமகிருஷ்ணன் மண்டபத்தில்...
அங்கு அதிகமான பெண்கள்.தமிழ் பெண்கள்.அகதிகளாக அதற்குள்...
அங்கு ஒரு பௌத்த பிக்கு.அவர்களுக்குப் பாதுக்காப்பாக...
அங்கு வருகிறார்கள் காடையர்கள்.பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில்...
அவர்களைத் தடுக்கிறார் அந்த பிக்கு.அந்த பெண்களை பாதுகாத்துக்கொண்டு இருக்கும் பிக்கு.
''என்னைக் கொன்றுவிட்டு இவர்களை கொல்லுங்கள்.''
எதிரே போய் நிற்கிறார்.
தன்னுயிரையும் கொடுக்கத் துணிகிறார்.அந்தப் பெண்களின் உயிர்களைப் பாதுகாக்க...
இங்கும் கடும் வாக்குவாதம்.இரண்டு பிக்குகளின் இடையே...
ஒரு பிக்கு இனவாதியாக..ஒரு பிக்கு மனிதாபிமானியாக...
இறுதியில் வென்றது மனிதாபிமானமே...
பின்வாங்கிச் செல்கிறார்கள் அந்தக் காடையர்கள்.
பாதுகாக்கப்படுகின்றன அந்தப் பெண்களின் உயிர்கள்.அவர்களின் கற்புகள்.ஒரு பௌத்த பிக்குவால்...
இன்னொரு சம்பவம்.கொழும்பு துறைமுகத்தில்...
கப்பலேற்றி அனுப்பப்படுகிறார்கள் தமிழர்கள்.வடக்கு-கிழக்கிற்கு அகதிகளாக...
அவர்கள் எல்லோரும் இப்போது கொழும்பு துறைமுகத்தில்...
உணவில்லை.கடும் பசி.உணவு தேடுகிறார்கள் அங்கு.
அங்கு உணவு விற்பதுண்டு.கேன்டீனில்...
அங்கே சில இளைஞர்கள்.சிங்கள இளைஞர்கள்.அவர்களிடம் கேட்கிறார்கள் உணவு.
உடனே கொடுக்கிறார்கள்.பணம் கொடுக்க வாங்கவில்லை...
ஏன்...?
அது அவர்கள் உண்ண வைத்திருந்த உணவு.மனம் வருந்துகிறார்கள்.தமிழர்க்கு ஏற்பட்ட நிலை கண்டு...
''இது அரசியல் சதி.எங்களுக்கு இதில் உடன்பாடில்லை.நீங்கள் எல்லோரும் திரும்பி வர வேண்டும்.மீண்டும் நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்.''
இவ்வாறு கூறுகிறார்கள் அவர்கள்.பெரும் ஆறுதல் தமிழர்க்கு.இப்படியும் இருக்கிறார்களே என்று..
இப்படி எத்தனையோ சம்பவங்கள்.சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும்தான் உதவினார்கள்.அடைக்கலம் கொடுத்தார்கள்.காப்பாற்றினார்கள்.
அதையும் தாண்டித்தான் ஏனையவர்கள் கொல்லப்பட்டார்கள்.400 பேர் பலி என்கிறது உத்தியோகபூர்வ அறிக்கை.
இல்லை... 3000 என்கிறது சுயாதீன அறிக்கை.
மேலும்,5000 இற்கு மேற்பட்ட வீடுகள்-கடைகள் எரிப்பு.கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறை
ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வடக்கு-கிழக்கிற்கு இடம்பெயர்வு.
அடுத்து என்ன...?
பார்ப்போம் நாளைய தொடரில்...
[தொடரும்]
[ஊடகவியலாளர்கள் .எம்.ஐ.முபாறக் ]

No comments