Breaking News

கோட்டை ரயில் நிலையத்துக்குள் கொடூரம்… 9 தமிழர்கள் எரித்துக் கொலை... தோட்டா பெட்டியுடன் வந்தவர் யார்..?

 [தொடர்-04] 

பதற்றம்-அச்சம்-தப்பியோட்டம்-தஞ்சம்-கொலை-கொள்ளை-வல்லுறவு.


இதுதான் கொழும்பின் நிலை.முழு நாட்டினதும் நிலை.


எங்கும் புகை மண்டலம்.எரியும் வீடுகள்-கடைகள்.மரண ஓலம்.


திரும்பும் பக்கமெல்லாம் சம்பவம்தான்..நிறைய சம்பவங்கள்.நிறைய கொலைகள்.களத்தில் காடையர்கள் மட்டுமே


அவற்றுள் ஒன்றுதான் இந்தக் கொலை.புறக்கோட்டை ரயில் நிலையக் கொலை.


9 தமிழர்கள் அடித்து-எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.வர்ணிக்க முடியா கொடூரம் அது.


எப்படி நடந்தது....? பார்ப்போம் விரிவாக..


புறக்கோட்டை ரயில் நிலையப் படுகொலை.அந்த 7 நாட்களுக்குள் நடந்த சம்பவங்களுள்-படுகொலைகளுள்  இதுவும் ஒன்று.முக்கியமான ஒன்று.


உள்ளத்தை உருக்கும் கொடூரம்.


அது ஒரு பகல் நேரம்.சரியாக ஒரு மணி.கடும் பரபரப்பு.அந்த ரயில் நிலையத்தில்..


கொழும்பில் தாக்குதல் உக்கிரம்.அங்கு இருக்க முடியாது.தப்பி ஓடுகிறார்கள் தமிழர்கள்.


சொந்த ஊர்களுக்கு...வேறு ஊர்களுக்கு...


அப்படியான ஒன்றுதான் இங்கும்.குவிகிறார்கள் இந்த ரயில் நிலையத்தில்...தப்பி ஓடுவதற்காக...


நிரம்பி வழிகிறது அந்த இடம்.எல்லா இன மக்களும்தான் அங்கு...


சற்று நேரத்தில் பயணம்.கண்டியை நோக்கி...மூன்றாவது மேடையில் இருந்து...


வேறெங்கும் நிற்காது.கண்டியைத் தவிர...


அறிவிக்கப்படுகிறது அவ்வப்போது....


முட்டி மோதுகிறார்கள் மக்கள்.பொறுமை இல்லை.ரயில் கிளம்பும்வரை...


என்னாகுமோ...? நிம்மதி இல்லை.மரண பயம்.எல்லோர் முகங்களிலும்...


இறைவனை வேண்டியவர்களாக எல்லோரும்...


இன்னும் ஓரிரு நிமிடங்கள்தான்...ரயில் புறப்படுவதற்கு...


இறுதி அறிவிப்பு.மெதுவாக வந்து நிற்கிறது ரயில்.பெரும் நிம்மதி அவர்களுக்கு.ஏறுகிறார்கள் ஓடிப் போய்...


நுழைகிறார்கள் உள்ளே.முட்டி மோதி...


ஆசனங்களை ஒதுக்குவதில் தீவிரம்.


அப்போதுதான் இந்தச் சம்பவம்.ஒன்பது அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவம்.ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சம்பவம்.


முன்கூட்டியே நுழைந்துவிட்டார்கள் காடையர்கள்.பயணிகளோடு பயணிகளாக...அந்தத் திட்டத்தோடு...


ஆட்டம் ஆரம்பம் இப்போது...


ஏறுகிறார் ஒருவர்.அந்தப் பயணிகளுடன் சேர்ந்து...


அவரது கையில் ஒரு பெட்டி.ஹார்போட் பெட்டி.வீழ்கிறது அது.மேடையில்...


இல்லை...வீழ்வதுபோல் காட்டுகிறார்.அவரேதான் போடுகிறார்..


வீழ்ந்து உடைகிறது.அதற்குள் சில பொருட்கள்.சிதறி ஓடுகின்றன மேடை எங்கும்.பயணிகளின் கால்களுக்குள்...


பயணிகளின் கவனமெல்லாம் அதன்மீதுதான்.பார்க்கிறார்கள் உற்று.


என்ன அது...?


திகைத்துப் போகிறார்கள்.அவற்றைக் கண்டதும்...


அவை என்ன தெரியுமா...?


தோட்டாக்கள்.....!!!


பாவிக்கப்படாத தோட்டாக்கள் .புத்தம் புதிய தோட்டாக்கள்.


உருண்டோடுகின்றன கால்களுக்குள்.மின்னுகின்றன தங்கம்போல்.அத்தனையும் புதியவை.


எட்ட நிற்கிறார்கள் பயணிகள்.மிதித்தால் வெடித்துவிடும் என்ற அச்சம்.


அவ்வளவுதான்....


சத்தம் வைக்கிறான் ஒருவன்.அந்தக் காடையர் கூட்டத்தில் ஒருவன்.திட்டப்படியே...


''இந்தா  LTTE வந்துட்டானுகள் ...கோச்சிக்கு குண்டு வைக்கப்போறானுகள்.''


அவ்வளவுதான்...


இந்தச் சத்தம் பயணிகளின் காதுகளில் விழ...ஒரே பதட்டம் அங்கு.


ஓடுகிறார்கள் ரயிலை விட்டு...பாய்கிறார்கள் ஜன்னல் வழியாக..


ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு... 


''கோச்சிக்குள் குண்டு....குண்டு'' என்ற சத்தம்தான்  எங்கும்...


கொதிக்கொள்கிறது ரயில் நிலையம்.பெரும் போராட்டம் அங்கு.உயிர்களை காப்பாற்றுவதற்காக...


அப்போது மேடையில் தயாராக ஒரு குழுவினர்.காடையர்கள்.


''எங்கடா புலி.ஒருத்தனையும் தப்ப விடக்கூடாது''.


கத்திக்கொண்டு நுழைகிறார்கள் ரயிலுக்குள்.நுழைந்த வேகத்தில் தாக்குதல்.அப்பாவித் தமிழர்கள்மீது.மரண அடி.


ஒப்பாரி வைக்கிறார்கள்.காலில் வீழ்கிறார்கள்.வீழ்ந்து கெஞ்சுகிறார்கள்.


''எங்களை கொல்லாதீர்கள்.நாங்க அப்பாவிகள்.''


எதையும் கவனத்தில் எடுக்கவில்லை அந்தக் காடையர்கள்.அவர்களின் கவனமெல்லாம் தமிழர்களை கொல்ல வேண்டும் என்பதில்தான்....


இழுத்துச் செல்கிறார்கள் தர தரவென.ரயில் பெட்டிகள் நெடுவே.தூக்கி வீசுகிறார்கள் வெளியே.அரிசி மூட்டைகளைப்போல்... 


பறந்து வந்து வீழ்கிறார்கள்.அந்த மேடை மீது...சீமெந்து கட்டுமீது...


தடார் ...தடார்  என்ற சத்தம்.வந்து விழும் சத்தம்.கூடவே ஒப்பாரியும்.தங்க முடியா வலியால்...


அத்தோடு முடிந்துவிட்டதா...? இல்லை.


இனித்தான் விளையாட்டே...


சுற்றி வளைக்கிறார்கள் அவர்களை.இரும்புக் கம்பிகள்-கனமான கம்புகள் சகிதம்...


தப்பியோட வழியில்லை....


இனி என்ன...நடக்கிறது வேட்டை.சுற்றி நின்று.துடிக்க துடிக்க ...கதறக் கதற... 


தலைகளை பதம் பார்க்கின்றன இரும்புக் கம்பிகள்.சிவந்து போகிறது அந்த மேடையே...


ஆம்...வழிந்தோடுகிறது இரத்தம்.அந்த அப்பாவிகளின் இரத்தம்.அவர்களின் தலைகளில் இருந்து..


துடிக்கிறார்கள்...கதறுகிறார்கள்...கெஞ்சுகிறார்கள்...ஒப்பாரி வைக்கிறார்கள்...உருளுகிறார்கள்...பிரளுகிறார்கள்...


எதுவுமே எடுபடவில்லை.ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை.


அசைவதாக இல்லை அந்தக் காடையர்கள்.கொன்றொழிப்பதிலேயே குறி..


சுற்றி பெரும் மக்கள் கூட்டம்.பயணிகள் கூட்டம்.நூற்றுக்கணக்கில்.


எல்லோரும் பார்வையாளர்களாக...


நிற்கிறார்கள் கைகட்டி...உதவிக்கு அழைத்தும் வேலையில்லை.ஒன்றும் ஆகவில்லை...அருகில்கூட வரவில்லை.எட்ட நின்று வேடிக்கை மட்டுமே...


தொடர்ந்து தாக்குதல்.உயிர் பிரியும்வரை...


ஆம்...இப்போது இறுதிக் கட்டம்.மெல்ல மெல்ல பிரிகின்றன உயிர்கள்.


சற்று நேரத்தில்...மொத்தமாக...


ஆம்...முடிந்துவிட்டது கதை.பிரிந்துவிட்டன உயிர்கள்.ஒன்பது உயிர்கள்.அப்பாவிகளின் உயிர்கள்.


ஒன்பது உடல்கள் அங்கு இப்போது.இரத்த வெள்ளத்தில்...


இழுத்துச் செல்கிறார்கள் அந்த உடல்களை.இன்னொரு மேடைக்கு...


தூக்கிப் போடுகிறார்கள்.ரயில் தண்டவாளத்தில்...


தீ வைக்கிறார்கள் அவற்றுக்கு.கடதாசிகளை அள்ளிப்போட்டு...


நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில்...


பற்றி எரிகின்றன உடல்கள்.புகை மண்டலமாக கோட்டை ரயில் நிலையம்...


எவராலும் காப்பாற்ற முடியவில்லை.திட்டப்படியே நடக்கிறது எல்லாம்....


இப்போதுதான் வருகிறார்கள் இராணுவமும் பொலிஸாரும்.எங்கோ மறைந்திருந்துவிட்டு...


சம்பவத்துக்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் அங்குதான்  நின்றார்கள்.அந்த ரயில் நிலையத்தில்...


சம்பவம் தொடங்கும்போது மிஸ்ஸிங்.இப்போது கமிங்.எல்லாம் முடிந்ததும்...


அவர்களைக் கண்டதும் அந்தக் காடையர்கள்.....!!


''சேர்...!!!! புலி ஒன்பது பேர்ட கதைய முடிச்சிட்டம் சேர்.அவனுகள் கோச்சில குண்டு வைக்க ப்லான் பண்ணி இருந்தானுகள்.தோட்டா பெட்டி ஒன்றும் வெச்சிருந்தானுகள்.அதோ..கீழே கொட்டிக் கிடக்கு...''


பெருமையுடன் கூறுகிறார்கள் அவர்களிடம்…


மீண்டும் அறிவிப்பு.ஒலிபெருக்கி மூலம்.


''மூன்றாவது மேடையில் தரித்து நிற்கும் ரயில் இன்னும் சொற்ப வேளையில் கண்டி நோக்கிச் செல்லும்.''


அறிவிப்பைக் கேட்டு மீண்டும் ஓடிப் போய் ஏறுகிறார்கள் தமிழர்கள்.


புறப்படுகிறது ரயில்.கண்டி நோக்கி...


இராணுவத்தின் பாதுகாப்போடு...ரயிலின் ஒவ்வொரு கதவடியிலும் இராணுவம்.


சிறிது நேரத்தில்… அங்கே தீ அணைப்புப் படை.அணைக்கிறார்கள் தீயை.நீரைப் பீச்சியடித்து...


மூன்றாவது மேடையில் இரத்தம்.கழுவுகிறார்கள் அதையும்...


அடுத்து அங்கே அம்பியூலன்ஸ்.விறு விறுவென ஏற்றுகிறார்கள் சடலங்களை...


சடாரெனப் பறந்துவிட்டது அந்த வாகனம்.


சம்பவம் ஒன்று நடந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை.


பொலிஸும் வரவில்லை.விசாரணையும் நடத்தவில்லை.


சம்பவம் நடந்தது பகல் ஒரு மணிக்கு.மாலை 6 மணிக்கு செய்தி.இலங்கை வானொலியில்... அது தொடர்பான செய்திதான்.


எல்லாம் தலைகீழ்....


''இன்று பகல் கண்டி நோக்கி புறப்படுவதற்குத் தயாராக இருந்த ரயில்மீது புலிகள் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த குண்டுத் தாக்குதல் இராணுவத்தால் வெற்றிகரமாக முறியடிப்பு.''


''அதில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது புலிகள் கொல்லப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.''


இப்படித்தான் அந்தச் செய்தி...


நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடந்த சம்பவம் அது.ஆனால்,அரசு எதைச் சொல்கிறதோ அதுதான் உண்மை.அதுதான் ஜே.ஆரின் அரசு.


மற்றுமொரு சம்பவத்தைப் பார்ப்போம் நாளைய தொடரில்...


தொடரும்...


[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக்]



No comments