அமெரிக்காவுடன் 20 வருட போரில் தாலிபான்களுக்கு ஆயுதமும், பணமும் வழங்கியது யார் ? ஆப்கான் இராணுவத்தின் எதிர்காலம் ?
கடந்த பதிவின் தொடர்ச்சி........
ஆப்கானிஸ்தானின் எல்லைகளாக ஈரான், துர்க்மேனிஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்தது.
பாகிஸ்தானை தவிர ஆப்கானிஸ்தானின் அண்டைய நாடுகள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானின் அதிபர் பர்விஸ் முஷாரப் தனது நாட்டு மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானில் நேட்டோவுக்கு தளம் வழங்கினார்.
பாகிஸ்தானில் தளம் வழங்கியிருக்காவிட்டால் ஆப்கானிஸ்தானை அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படையினர்களினால் கைப்பேற்றியிருக்க முடியாது.
அவ்வாறு கைப்பேற்றி இருந்தும், ஒசாமா பின் லேடனை ஆப்கானிஸ்தானில் பிடிக்கவோ, அல்-கொய்தா இயக்கத்தையும், தாலிபான்களையும் முற்றாக அழிக்கவோ முடியவில்லை.
அத்துடன் நேட்டோ படைகளினால் ஆப்கானின் பிரதான நகரங்களை கைப்பேற்ற முடிந்ததே தவிர, ஆப்கான் முழுவதையும் தங்களது பூரண கட்டுப்பாடின்கீழ் இவர்களால் கொண்டுவர முடியவில்லை.
ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளும், மலைத் தொடர்களும் இயற்கையாக அமைந்துள்ள ஓர் நாடு. இது கெரில்லா போராளிகளுக்கு மிகவும் சாதகாமான சூழ்நிலை அங்கே காணப்படுகின்றது.
இதை ஆக்கரமித்த சோவியத் படைகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக அமெரிக்காவினால் வளர்க்கப்பட்ட போராளிகளுடன் இருபது வருடங்கள் யுத்தம் செய்திருந்தும் தாலிபான்களை நேட்டோ நாடுகளினால் தோற்கடிக்க முடியவில்லை.
மாறாக உலக வல்லரசு படைகளே தாலிபான்களிடம் தோல்வியடைந்ததுடன், அவர்களிடம் மண்டியிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சோவியத் ரஷ்யா ஆப்கானில் தோல்வியடைந்ததை அமெரிக்கா தனக்கு ஓர் படிப்பினையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் தனது எதிரி நாடான ஈரானை தாக்குவதற்கான தளமாகவும், மத்திய கிழக்கையும், ஆசியா கண்டத்தையும் இணைக்கும் முக்கிய கேந்திர நிலையமாகவும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கருதியதன் காரணமாகவே பாரிய விலைகொடுத்து ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.
தற்போது நேட்டோ நாட்டு படைகள் வெளியேறிவருகின்ற நிலையில், அதி வேகத்தில் தாலிபான்கள் ஆப்கானின் ஒவ்வொரு மாவட்டங்களாக கைப்பேற்றி வருகின்றனர். இந்த வேகத்தை பார்க்கின்றபோது அமெரிக்காவுக்கே ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஆப்கானின் வடக்கு எல்லை நாடுகளான துர்க்மேனிஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் ஆப்கான் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் எல்லைவளியாக தப்பிச்சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
நேட்டோ படைகள் இருபது வருடகாலம் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தபோது தங்களது வாழ்வாதாரத்திற்காக பல ஆயிரம் மக்கள் நேட்டோ படை முகாம்களில் தொழில் செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பில் வாழ்ந்துவந்தனர்.
ஆனால் நேட்டோ படைகள் அனைத்தும் வெளியேறினால் தங்களை தாலிபான்கள் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சம் இவ்வாறானவர்களிடம் காணப்படுவதுடன், இதே நிலைப்பாட்டில் ஆப்கான் படையினர்களும் உள்ளனர்.
தங்களிடம் பணிபுரிந்த மற்றும் உளவு வேலை பார்த்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை அமெரிக்கா, பிரித்தானிய உட்பட பல நேட்டோ நாடுகள் தங்களது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளது.
அதேநேரம் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் பலர் தங்களது எதிர்காலம் கருதி தலிபான்களிடம் சரணடைந்திருகின்றனர்.
இங்கே நாங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது உலகின் பலம்வாய்ந்த சக்தியுள்ள வல்லரசு நாடுகளின் கூட்டணிகளான நேட்டோ படைகளுடன் தாலிபான் இயக்கத்தினால் தனித்துநின்று இருபது வருடங்கள் போராடுவது என்பது சாதாரண விடையமல்ல.
எத்தனையோ தோல்விகளும், இழப்புக்களும், பின்னடைவுகளும் ஏற்பட்டிருந்தும், மனம் தளராது உறுதியுடன் என்றோ ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கொள்கை உறுதியுடன் விட்டுக்கொடுக்காது தொடர்ந்து போராடியதானது ஆச்சர்யப்படக்கூடியது.
இவ்வாறு இருபது வருட போராட்டத்துக்கு பணமும், ஆயுதங்களும் தாலிபான்களுக்கு வழங்கியது யார் ?
அது நிச்சயமாக ஒரு பலமுள்ள இஸ்லாமிய நாடாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு பலமுள்ள நாடு ஒன்றின் பின்னணி இல்லாமல் இவ்வளவு காலத்துக்கு இந்த போராட்டத்தில் நிலைத்திருக்க முடியாது.
அத்துடன் ஈரான் எல்லை எப்போதும் தாலிபான்களுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றதென்பது கவனிக்கத்தக்கது.
நேட்டோ படைகளின் முழுமையான வெளியேற்றத்துக்கு பின்பு தாலிபான்கள் ஆப்கானை முழுமையாக கைப்பேற்றினாலும் அங்கு போர் ஓயப்போவதில்லை.
ஏனெலில் அங்கு தாலிபான்களுக்கு எதிரான வேறு ஆயுதக் குழுக்களும் உள்ளன. அவர்கள் மூலமாக தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்துவதற்கும், மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடாத்துவதற்கும் அமெரிக்கா திட்டமிடுகிறது.
இதற்காக தளம் அமைப்பதற்கு பாகிஸ்தானிடம் அமெரிக்கா உதவி கோரியபோது அதனை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
1979 தொடக்கம் 1989 வரையான ஒன்பது வருட யுத்தத்தில் சுமார் முப்பதாயிரம் சோவியத் ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதுடன், சுமார் ஐம்பத்தி ஐயாயிரம் ரஷ்ய படைகள் காயமடைந்து ஊனமுற்றதாக கூறப்படுகின்றது.
ஆனால் 2001 தொடக்கம் 2021 வரையான இருபது வருட யுத்தத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்டார்கள் ? ஊனமுற்றார்கள் ? என்ற உண்மையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments