Breaking News

இளவயதில் தலைவர் அஷ்ரபின் கரம்பற்றிய மூத்த போராளி கௌரவ கே.ஏ.பாயிஸின் இழப்பு ஈடுசெய்ய முடியா இழப்பு : ஹரீஸ் எம்.பி அனுதாபம் !

தைரியமும், ஆளுமையும், வினைத்திறனும் கொண்ட மூத்த போராளியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  இழந்திருக்கிறது. தேசிய அமைப்பாளராக இருந்து முஸ்லிங்களின் விடுதலை இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நாட்டின் நாலா திசைக்கும் கொண்டுசென்ற சகோதரர் கௌரவ கே.ஏ.பாயிஸின் இழப்பு புத்தளம் மண்ணுக்கும் மாவட்டத்துக்குமான இழப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது அவரின் இழப்பானது முழு நாட்டு முஸ்லிங்களுக்கும் பெரும் இழப்பாகும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், 


பெருந்தலைவர்  எம்.எச்.எம்.அஷ்ரபின் கொள்கையான இந்த நாட்டு முஸ்லிங்கள் ஒரு தேசிய இனம் எனும் கோஷத்தை தேசியமயமாக்கியவர். அதே நேரம் அந்த காலகட்டத்தில் முஸ்லிங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அடிமையாக்கப்பட்டபோதும், ஆயுத இயக்கங்களினால் அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அதற்கேதிராக எங்களுடன் கைகோர்த்து புத்தளம் மண்ணில் களமிறங்கி வடக்கு கிழக்கு முஸ்லிங்களின் விடுதலைக்காக போராடிய மாவீரன் அவர். 


என்னுடன் எப்போதும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்த அவர் என்னுடைய கருத்தியலுடன் எப்போதும் உடன்பாடு கொண்டவராக இருந்தார். அவரின் இழப்பு எனக்கும் பேரிழப்பாகவே உள்ளது. அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், அவரின் குடும்பத்தினர் சகலருக்கும் இறைவன் நிம்மதியை வழங்கிட வேண்டும். எல்லாம் வல்லநாயகன் அன்னாரின் நல்லவைகள் சகலதையும் ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கிட இருக்கரமேந்தி பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


ஊடகப்பிரிவு




No comments

note