பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள்..! - நடந்தது என்ன?
இலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (24) பிற்பகலில் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறியமுடிகிறது.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இம்ரான் கானிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என தம்மிடம் இம்ரான் கான் கூறியதாக முஸ்லிம் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.
"உடல்கள் பலாத்காரமாகத் தகனம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களிடம் தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார். மேலும் கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை தகனம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர தம்முடன் பேசியவர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் இம்ரான் கான் நம்பிக்கையூட்டினார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரையில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, அவரை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பர் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக, இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் பிரதமருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆயினும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் தமது அரசாங்கம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அரசின் இந்த பதில் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றினார், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம்.
"போலியான, கோழைத்தனமான காரணத்தை கெஹலிய ரம்புக்வெல கூறுகிறார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தால் - அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க பிரமுகர்களுக்கு அரசாங்கம் கூறியுள்ளது. இது எந்த அடிப்படையும் இல்லாத பித்தலாட்ட கதையாகும்" என்று ரஊப் ஹக்கீம் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இலங்கையின் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா காரணமாக மரணிப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டும், இவ்விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரின் கனவத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாறான நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமருக்கும் இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக இது குறித்து தனது 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; 'பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திடம் தான் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியதாக' குறிப்பிட்டிருந்தார்.
யூ.எல்.மப்றூக்
பிபிசி தமிழுக்காக
No comments