மாதாந்த கிளினிக் மருந்துகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி தொடரும் : அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்.
நூருல் ஹுதா உமர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் காலங்களில் வயதானவர்களினதும் நாற்பட்ட நோயிகளினால் பாதிப்புக்குள்ளானவர்களினதும் பாதுகாப்பு நலன்கருதி அவர்களது மாதாந்த மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்கான திட்டங்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, தபாலகம் போன்றவற்றுடன் இன்னும் பல அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி இருந்தோம்.
தற்போது நாம் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுபட்டிருந்தாலும் கொரோனா தொற்றின் அபாயம் முற்றாக நீங்கிவிடவில்லை என்பதனால் இப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதனை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். எம்மக்களை பாதுகாப்பது நம் ஒவ்வோர் மீதும் கடமையாகும் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்கு பின்னரான அக்கரைப்பற்றின் சமகால நிலைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"வெள்ளம் வர முன்னர் அணை கட்ட வேண்டும்" அதை விட்டுவிட்டு வெள்ளம் தலைக்கு மேலால் சென்று மூழ்கி இறந்த பின்னர் கவலைப்பட்டு எதையும் செய்ய முடியாது. நாற்பட்ட நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு இலக்கானால் அவர்களை சுகப்படுத்துவதில் வைத்தியர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பெரிய போராட்டம் இருக்கின்றது. அந்த நோயாளிகளின் விடயத்தில் இறைவனின் நாட்டம் வேறுமாதிரியாக அமைந்தால் அதன் பின்னர் வரும் சிக்கல்களை நாம் அறிவோம். அவற்றையெல்லாம் தவிர்க்க ஆழமான சிந்தனையுடன் கூடிய ஒழுங்கான வேலைத்திட்டம் அவசியம்.
அதனை மையமாக கொண்டே இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றோம். ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள வைத்தியசாலைகள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைத்து ஒரே நேர்கோட்டில் சமூக நலனை கவனத்தில் கொண்டு இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் இப்போதைய தேவையாக உள்ளது என்றார்.
No comments