முகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு
ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து முகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
சம்மாந்துறை பிரதேசத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஹோட்டல் ஊழியர்கள், பொதுச்சந்தை வியாபாரிகள், கடைகளில் பணிபுரிபவர்கள், கொழும்பிலிருந்து வருகை தந்து வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனப் பலர் கட்டம் கட்டமாக அழைக்கப்பட்டு நாளாந்தம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒன்றுகூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அதனை மீறுபவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு குழு அமைக்கப்பட்டு நோய் தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த எந்தவொரு பொருளும் வியாபார நடவடிக்கைக்காக சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டது.என்பதோடு பாதையோர வியாபாரத்தில் ஈடுபடும் எந்தவொரு வியாபாரியும் தரித்து நின்று ஒரே இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் நடமாடி வியாபாரம் (தொலைபேசி மூலம்) செய்யும் முறைமையினை பின்பற்றுமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியை பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி அறிவித்தல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பிரதேசத்தில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments