Breaking News

ஆனமடு போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விபத்தில் உயிரிழப்பு

ஆனமடு நகரில் இடம் பெற்ற விபத்தொன்றில்  ஆனமடு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி  உயிரிழந்துள்ளதுடன் ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் ( 04 ) இரவு  11.45 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.   

நிக்காவெரட்டி இகலகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான  உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஏ. ஹேமந்த ரத்நாயக்க ( வயது 38 ) என்பவரே  இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் காயாமடைந்த பொலிஸ் பரிசோதகர் மதுரங்க   ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த இரு அதிகாரிகளும் ஆனமடு பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த சமயம்   கொட்டுகச்சி பிரதேசத்தில் திருட்டுத்தனமாக மாடுகளை லொறியொன்றில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் ஆனமடு பொலிஸிற்கு சொந்தமான பொலிஸ்  நடமாடும் சேவை மற்றுமொரு கடமைக்காக சென்றிருந்தது.    அதன் காரணமாக உயிரிழந்த உதவி பொலிஸ் பரிசோதகர் தனது சொந்த காரில்  குறித்த  இடத்திற்கு செல்ல தயாராகியுள்ளார்.  

உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் தனது வாகனத்திற்கு முன்னாள்  வந்து கொண்டிருந்த  சந்தேகத்திற்கிடமான லொரிக்கு பின்னால் தான் ஓட்டி வந்த காரைத் திருப்ப நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் உப பொலிஸ் பரிசோதகரின் கார் சறுக்குச் சென்று ஆனமடு நகரிலுள்ள மணிக் கூட்டு கோபுரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாடுகளை ஏற்றி வந்த லொறி தப்பிச் சென்றுள்ளது.  

விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளை பொது மக்கள் ஆனமடு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஒருவர் உயிழந்துள்ளார். ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வரும் அதேவேளை பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது .

-  புத்தளம் நிருபர் -






No comments