Breaking News

கண்டி வாழ் முஸ்லிம் கல்விமான்களே! உலமாக்களே! புத்திஜீவிகளே! - உங்களோடு ஒரு சில நிமிடங்கள்

எம்.என்.எம். யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே பாராளுமன்றத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். அரசியலில் ஒவ்வொருவருக்கும் விருப்பு, வெறுப்புண்டு. ஆனால், அவைகளால் நம் சமூகம் முழுமையாகப் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறித்து நாதியற்ற சமூகமாக மாற்றுவதற்கு பேரினவாத சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு  நமது சமூகத்தை நாதியற்ற சமூகமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், அவர்களிடையேயுள்ள அரசியல் தலைமைகளை அழிப்பதனூடாக தங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதற்காக இந்தத்தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள பேரினவாதிகளும், அதற்குச்சார்பான ஆட்சியாளர்களும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த கால முஸ்லிம் சமூகத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களைச்சற்று நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். அவ்வாறான சூழ்நிலைகளில் நமக்கான குரலாக மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமின் குரல் பாராளுமன்றத்திலும், தேசியத்திலும், சர்வதேசத்திலும் ஒலித்தது. இவ்வாறான செயற்பாடுகளால் ஆளுந்தரப்புக்கு அழுத்தங்கள் இராஜதந்திர ரீதியாகவும் கொடுக்கப்பட்டது.

எனவே தான், பாராளுமன்றத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டெலிபோன் சின்னத்தில் முதலாமிலக்கத்திற்குச் சொந்தக்காரராகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தோற்கடிக்க வேண்டுமென பேரினவாதிகளும், பேரினவாதக்கட்சிகளும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 

இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒருசாரார் ஒத்துழைப்பது கவலையான விடயமாகும். அந்த வகையில், பேரினவாதக்கட்சிகளில் செல்வந்தர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடச்செய்வது, சுயட்சைக் குழுவிலும் சிலர் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளைத் துண்டாடி முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் கைங்கரியம் நடைபெறுகிறது.

இம்முறை ரவூப் ஹக்கீமைத் தோற்கடிக்க வேண்டுமென்பேதே பேரினவாதிகளின் பிரதான நோக்கமாக இருக்கிறது. இன்று பேரினவாதக்கட்சியிலும், சுயட்சைக்குழுவிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் அனுபவித்த கசப்பான சம்பவங்களிலிருந்து சமூகத்தை விடுவிக்க என்ன செய்தார்கள்? இக்கேள்வியை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

மொட்டுக்கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் முஸ்லிம் ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஆளும் தன் கட்சி அரசாங்கத்திடம் எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுத்தர முயன்றார் என்பதை அவரால் மக்கள் மத்தியில் சொல்ல முடியுமா? அல்லது அதற்கெதிராக தனது கட்சி மேல் மட்டங்களிடம் பேசத்தான் முடிந்ததா? இவ்வாறு சமூகம் சார்ந்த விடயங்களில் தங்களைக் கேள்வி கேட்டு அழுத்தங்களை ஏற்படுத்தாத பொம்மைத் தலைவர்களையே ஆளுங்கட்சியினர் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

எனவே தான், நாம் சற்று சிந்தித்துச்செயற்பட வேண்டும். றவூப் ஹக்கீம் வெறுமனே கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரன்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்பதை நாம் மறந்து விட முடியாது. முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் போது, அரசியல் ரீதியாக எல்லோரையும் ஒன்றிணைத்து தலைமைத்துவம் கொடுத்தவர் ரவூப் ஹக்கீம் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம்.

எனவே, கண்டியில் போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, அவர்கள் யாவரும் கண்டி மாவட்டத்தை மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவர்களாகவே இருப்பார்களேயன்றி தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது.

அதே போல, முஸ்லிம் சமூகத்தின் தலைமையாக சர்வதேச ரீதியாக அறியப்பட்ட தலைவராக ரவூப் ஹக்கீம் விளங்குகிறார். இதன் காரணமாகவே சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் அடிக்கடி ரவூப் ஹக்கீமைச் சந்தித்து சிறுபான்மையினர் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள்.

கடந்த கால முஸ்லிம் சமூகத்தின் நெருக்குவாரங்களின் போது ரவூப் ஹக்கீமால் அவற்றை சர்வதேசம் வரை கொண்டு செல்ல முடிந்தது. எனவே, தனது விருப்பு, வெறுப்புகளுக்கப்பால் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ரவூப் ஹக்கீம் என்ற தலைமையை வெற்றிபெறச்செய்ய வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்து கண்டி வாழ் முஸ்லிம் கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் முன்வந்து மக்களைத் தெளிவுபடுத்தி ரவூப் ஹக்கீமின் வெற்றியை இறைவன் உதவியுடன் உறுதி செய்யமுன் வர வேண்டும்.



No comments

note